Saturday, February 28, 2009

நலிந்தவருக்கு ஒரு நல்ல திட்டம்...


ஆறாம் வகுப்பு மாணவி அமுதா. வெளுத்து மெலிந்த தேகம். கழுத்தில் ஒரு கருப்புக்கயிறு.
அரசு கொடுத்த சீருடைதான். நீலநிற அரை பாவாடை. வெள்ளை சட்டை. காதுகளில் தோடு
இருந்ததற்கு அடையாளமாக துளைகள். இப்போது அதில் குச்சி மட்டும். கணக்குப்பாடத்தில்
அபார ஞானம். வேகமாக கணக்குகள் செய்வதால் ஆசிரியை அவளை உதவிக்கு அழைத்துக்
கொள்வார்.
மெதுவாகப்பேசுவாள் அமுதா. விளையாட்டு வகுப்பிற்குப் போகும்போது உடற்கல்வி
ஆசிரியர் அவளை ஓரமாக உட்காரச்சொல்லிவிடுவார். ஏன் அமுதாவிற்கு என்ன குறை?
பிறவியிலேயே அமுதாவிற்கு இதயத்தில் குறைபாடு. இதயத்தில் ஓட்டை இருக்கிறது.
ஒரு நாள் பள்ளிக்கூடத்திற்கு கூட்டமாக வந்து மருத்துவ பரிசோதனை செய்த டாக்டர்கள்
கண்டுபிடித்த உண்மை அது.
பக்கத்தில் இருக்கும் மாவட்ட மருத்துவமனைக்குப் போய் பெரிய டாக்டரைப்பார்க்கும்படி
சிபாரிசு கடிதம் கொடுத்துவிட்டு டாக்டர் கூட்டம் போய்விட்டது.
ஆசிரியை அமுதாவிடம் அப்பாவை கூட்டிவரச்சொல்லி ஒரு மாதமாகிவிட்டது.
ஆள் வந்தபாடில்லை. ஒரு மாலை நேரத்தில் அமுதாவின் தாய் மட்டும் வந்தார்.
அமுதாவின் அப்பா ஒரு தச்சுத்தொழிலாளியாம். வேலைக்குப்போகாவிட்டால்
சம்பளம் கிடைக்காதாம். பள்ளிக்கு வந்துபோக நேரமில்லையாம். அமுதாவிற்கு
நடந்தால் இரைக்கும் என்றும் வீட்டில் சோர்ந்து படுத்து விடுவாளென்றும்
அந்தத்தாய் சொன்னபோது ஆசிரியைக்கு அது வியப்பான செய்தியாகத் தெரியவில்லை.
அதற்கு காரணம் இருக்கிறது.
பள்ளிக்கூடங்களில் பிறவி இருதய குறைபாடுகளுடன் உள்ள குழந்தைகளை ஆசிரியர்கள்
ஒவ்வொரு வருடமும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
இந்தப்பிள்ளைகள் நன்றாக படிப்பவர்களாக இருந்துவிடும்போது அவர்களின்மீது கூடுதல்
இரக்கம் பிறந்து விடுகிறது.
ஆசிரியர்களால் இப்படிப்பட்ட பிள்ளைகளுக்கு உதவி செய்ய முடியாத நிலை.
தமிழக அரசின் ஒரு திட்டம் அண்மையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இரக்ககுணம்
உடைய எவரும் வரவேற்க வேண்டிய திட்டம் இது.
இந்த திட்டத்தின் பெயர் "முதலமைச்சர் இளம் சிறார் இருதய பாதுகாப்புத் திட்டம்"
இருதயத்தில் குறைபாடு உள்ள இளம் சிறார்கள் பள்ளியிலேயே சோதனை செய்து
கண்டறியப்படுகிறார்கள்.
சாதாரண இருதய மருத்துவ சிகிச்சைக்கு 10,000 ரூபாயும்
சாதாரண திறந்த இருதய அறுவை சிகிச்சைக்கு 60,000 ரூபாயும்
சிக்கலான திறந்த இருதய அறுவை சிகிச்சைக்கு 70,000 ரூபாயும் அரசு வழங்குகிறது.
சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவிகள் அவர்கள் விரும்பும் மருத்துவ மனைகளில்
அறுவை சிகிச்சை செய்துகொள்ளலாம் என்பது ஒரு நல்ல விஷயம்.
இந்ததிட்டத்தை அனைத்து தொண்டு நிறுவனங்களும் கண்காணித்து ஒருங்கிணைத்து நடத்தவேண்டும்.
இந்த திட்டத்தில் ஈடுபடும் மருத்துவர்களும், மருத்துவ மனைகளும் முழு ஈடுபாட்டுடன் செயல்படவேண்டும்.
இதுவே நாகரிக உலகத்தின் வேண்டுதலாகும்.

மு.குருமூர்த்தி

திரைகடலோடி...மனநலம் தேடு.

நள்ளிரவில் அந்தவிமானம் தமிழ்நாட்டின் தரையைத்தொட்டபோது அவனுடைய நினைவுகள் சொந்த ஊரைத்தொட்டுவிட்டிருந்தது.


நான்கு வருடங்களுக்கு முன்னால் இதே விமான நிலையத்திலிருந்து கம்புக்கூட்டில் ஒரு மஞ்சள் பையும் தோளில் ஒரு பயணப்பையுமாக மிரள மிரள வரிசையில் நின்றது நினைவுக்கு வந்தது.


அந்த நினைவுகளை புறம்தள்ளிவிட்டு வீட்டுநினைப்பு முண்டியடித்து முன்னால் நின்றது.


சீக்கிரம்வீட்டுக்குப்போகணும்......


ஆயாவை.....அம்மாவை.....மகனை.....மகளை....மனைவியை...தொட்டுப்பேசணும்.....குளிக்கணும்.....தரையில் உட்கார்ந்து சுற்றம் சூழ பேசிக்கொண்டே சாப்பிடணும்......


மேசையில் பரத்திவைத்த சாமான்களின்மீது டூட்டியிலிருந்த சுங்க அதிகாரியின் பேராசைக்கண்கள் மேய்ந்தன....அந்தமேய்ச்சலில் ஆசை மகளுக்கு பார்த்துப்பார்த்து வாங்கிவந்த பேசும் பொம்மை இரையாகிப்போனது....


பரவாயில்லை.....சீக்கிரம் வீட்டுக்குப்போகணும்.......


டாலரை மாற்றித்தரும் அரசு வங்கி பூட்டியிருக்கிறது. உள்ளே லைட்டை எரியவிட்டுக்கொண்டு ஓர் ஆள் மல்லாந்து தூங்கிக்கொண்டிருக்கிறான். போகட்டும்.....வெளியில் புரோக்கர் நிற்பான்......கொஞ்சம் பணம் நஷ்டப்பட்டாலும் பரவாயில்லை.......


சீக்கிரம் வீட்டுக்குப்போகணும்......


வம்புபேசும் போர்ட்டர்கள்......டாக்ஸிடிரைவர்கள்......வலிந்து அழைக்கும் ஓட்டல்காரர்கள்.......எல்லோரும் பொருட்டல்ல......அவனுக்கு.


சீக்கிரம் வீட்டுக்குப்போகணும்......


வெளிநாட்டிற்குப்போய் சம்பாதித்துவரும் நம்முடைய பிள்ளைகள் நம்முடைய கண்ணெதிரே சந்திக்கும் அவலங்கள்தான் இவை.


நம்முடைய கண்ணுக்குத்தெரியாமல் அவர்கள் சந்தித்த அவலங்கள் எத்தனை.......


உலகமயமாக்கலின் அடிப்படையே இடப்பெயர்ச்சிதான்.


இடம்பெயர்ந்துவாழ்வதற்கான காரணங்களும் அதன் விளைவுகளும் மாறிக்கொண்டே இருக்கின்றன.


சமூக, கலாச்சார, பொருளாதார மற்றும் அரசியல் சக்திகளால் மக்கள் இடம்பெயர்ந்து வாழ்வது இன்று அதிகரித்திருக்கிறது.


ஏறத்தாழ 170 மில்லியன் மக்கள் தங்களுடைய பிறந்த நாட்டைவிட்டு அயல்நாட்டில் குடியேறிவாழ்வதாக கருதப்படுகிறது.


ஒவ்வொரு ஆண்டும் 700 மில்லியன் மக்கள் சொந்தநாட்டின் எல்லைகடந்து பயணம் செய்வதாக கருதப்படுகிறது.


இந்த மாபெரும் இடப்பெயர்ச்சி காரணமாக தொற்றுநோய்கள் பரவுகின்றன என்பது நமக்குத்தெரிந்த செய்தி.


அதேசமயம் எவ்வளவுபேர் மனநல பிறழ்வுகளுக்கு ஆளாகிறார்கள் என்பது நம்முடைய கவனத்திற்கு வருவதில்லை.


உலகமயமாக்கல் வழியாக பரந்துபட்ட சமூக பொருளாதார நன்மைகள் கிடைக்கப்பெறுகின்றன என்பதில் மாற்றுக்கருத்தில்லை.


அதே நேரத்தில்

மிதமிஞ்சிய நுகர்வுக்கலாச்சாரம்,

வேலையில்லாத்திண்டாட்டம்,

வேலைக்கான உத்திரவாதமின்மை,

வறுமை அதிகரிப்பு,

சாதாரணமனிதனுக்குக்கூட எட்டாக்கனியாகிப்போன கல்வியும் சுகாதாரமும்,

இயலாதவர்களுக்கும் வேலைவாய்ப்பு இல்லாதவர்களுக்கும் சமூக பாதுகாப்பின்மை

ஆகிய கேடுகள் நம்மை அச்சுறுத்திக்கொண்டிருக்கின்றன.


கிராமப்பொருளாதாரம் நசித்துப்போவதும்

உலகளாவிய சுற்றுச்சூழல் சீர்கேடுகளும் கூட மக்களை இடம்பெயர்ந்து வாழத்தூண்டுகின்றன


உலகமயமாக்கல் மக்களை நிரந்தரமாகவோ தற்காலிகமாகவோ இடம்பெயர்ந்து வாழச்செய்கிறது.

அதுமட்டுமல்லாமல் மனநல பிறழ்வுகளுக்கும் அதுவே காரணமாக அமைகிறது என்பதை மறுக்க இயலாது.


விரைவாக வளர்ந்துவரும் சந்தைப்பொருளாதாரத்திற்கு முக்கியமான தேவை மலிவான உடலுழைப்பு ஆகும்.


சட்டதிட்டங்கள் அறிந்திராத கிராமத்து மகளிரை குடும்பங்களை விட்டு பிரித்துக்கொண்டுவந்துவிட்டால் மலிவான உடலுழைப்பு எளிதில் கிடைத்துவிடும்.


ஐரோப்பா, வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து போன்ற நாடுகளில் குறைவான மக்கள்பெருக்கமும், வளர்ந்துவரும் முதியோர் எண்ணிக்கையும் பெரும் பிரச்சினைகளாக உருவெடுத்துள்ளன.


மலிவான விலையில் உடலுழைப்பை அளிக்கக்கூடியவர்கள் அவர்களுக்கு வேண்டும்.


பழகப்பழக பல்வேறுகாரணங்களினால் இவர்கள்மீது முதலாளிகளுக்கு வெறுப்பேற்படுவது அன்றாட நிகழ்வாகிப்போய்விட்டது.

இதுபோன்ற இடங்களில் மனித உரிமைகள் பறிக்கப்படும்போது பாதிப்படைவோர் அண்டைநாடுகளில் தஞ்சம் புகுவதும் நடைபெறுகிறது.


அண்டைநாடுகள் ஏழைநாடுகளாக இருந்துவிட்டால் தஞ்சம் தேடிவந்தவர்களை பராமரிக்கும் சக்தியில்லாமல் திணறுவதும் கவலைக்குரியது.

வறுமை காரணமாக ஆள்கடத்தும் வியாபாரம் சட்டவிரோதக்குடியேற்றம் ஆகியவை உருவெடுக்கின்றன.

நுகர்வுக்கலாச்சாரம், தகவல்தொடர்புசாதனங்கள் காரணமாக பல்வேறு சமூகக் குழுக்களும் தம்முள் நெருங்கிவரும் வாய்ப்பைப் பெறுகின்றன என்பதை மறுப்பதற்கில்லை.


இடம்பெயர்ந்து வாழும் குழுக்களை ஆராயும்போது.........

கூடி வாழும் சமுதாயமாக இணைந்துசெயல்படுவதில் ஆர்வமுள்ள ஏழைமக்கள்.......... சுயநல நாட்டமுள்ள பணக்காரக்குழுக்களை நோக்கி நகருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


வேறுபட்ட சமூகக்குழுக்கள் தம்முள் பொருந்திப்போகாமலும் அதேசமயம் நெருங்கிவாழவேண்டிய கட்டாயச்சூழலும் ஏற்படும்போது தனிமனிதர்களிடையே மனநல பிறழ்வுகளும், குழுக்களிடையே பதற்றமும் தோன்றுகிறது.


இடம்பெயர்ந்து வாழும் மக்களின் நிம்மதியை ஒரு தனிமனிதனோ ஒரு குழுவோ சேதப்படுத்துவதை நாம் அலட்சியப்படுத்த இயலாது.தனிமைப்படுத்தப்படுவது,

சிறுகூறாகிப்போவது,

சுய அடையாளமில்லாத வாழ்க்கை,

உற்றார் உறவினரிடமிருந்து பிரிந்து வாழ்வது,

இருப்பிடப்பிரச்சினைகள்,

பழகிப்போன குடும்ப கலாச்சாரம்

இவையெல்லாம் இடம்பெயர்ந்து வாழும் மக்களின் மனநலத்தை பாதிக்கின்றன.


குடிபெயர்ந்து வாழ்வோரின் இன, கலாசார, மொழி பெருமைகளை முதலாளிகள் அங்கீகரிக்காமற்போகும்போது மன உளைச்சல் மேலும் அதிகரிக்கிறது.


இந்த சூழலில் அரசாங்கத்தின் பங்கு மிகவும் முக்கியமானது. அயல்நாடுகளில் தம்முடைய குடிமக்களின் நியாயமான உரிமைகள் மறுக்கப்படும்போது தூதரகங்கள் மூலம் விரைவாக செயல்பட்டு தீர்வுகாணவேண்டியதுதான் நல்ல அரசின் இலக்கணம் ஆகும்.


கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிற்கு அந்நியச்செலாவணியை ஈட்டித்தரும் நம்வீட்டுப்பிள்ளைகளுக்கு அவர்களுடைய பயணத்தின் ஒவ்வொரு நிலையிலும் பாதுகாப்பு அரணாக நிற்கவேண்டியது நல்ல அரசின் கடமையாகும்.

மு.குருமூர்த்தி

புதைக்கப்பட்ட இலவசக்கல்வியும் விதைக்கப்படாத சமச்சீர்கல்வியும்


ஒரு பொற்காலம் இருந்தது தமிழ்நாட்டில்.

பஞ்சை பராரிகளின் பரட்டைத் தலையை தடவிக் கொடுத்து பள்ளிக்குப் போகச் சொன்ன காலம் அது. கூழுக்கு உழன்ற ஏழைகளின் வாழ்வுக்கு உதவிய காலம் அது. கல்வியை முழுமையாக அரசே கையிலெடுத்துக்கொண்ட காலம் அது. கையிலெடுத்துக்கொண்ட கல்வி சிந்தாமல் சிதறாமல் ஏழைக்குழந்தைகளின் வாழ்வைச் சென்றடைந்த காலம் அது.

இன்றைய கல்வித்துறையில் ஏன் இத்தனை அவலம்? எத்தனை வகைப் பள்ளிகள்! நமது பள்ளிப்பிள்ளைகளில் எத்தனை வகை ஏற்றத்தாழ்வுகள்! எப்போது தோன்றின இந்தப்பிளவுகள்? ஏன் விளைந்தன இத்தனை வேறுபாடுகள்? காரணம் யார்? மக்களா? அரசா? ஆசிரியர்களா?

பள்ளிப்பருவத்திலேயே இத்தனை வேறுபாடுகளை விதைக்கிறோமே!... எதிர்காலத்தில் வேறுபாடற்ற சமுதாயம் எப்படி விளையும்? கேள்விகள் மட்டுமே இங்கே விளைகின்றன. விடைகளை விளைவிக்க யாரும் இல்லை.

தமிழ்நாட்டில் தற்போது இருந்துவரும் நான்கு வகையான பள்ளிகளையும், பாடத்திட்டங்களையும் ஒருங்கிணைத்து சமச்சீர் கல்விமுறையைக்கொண்டுவரும் நோக்கத்தில் அரசாங்கம் ஒரு குழுவை அமைத்தது. குழுவும் ஆய்வறிக்கையை அரசுக்கு கொடுத்துவிட்டது. இந்த நான்குவகைப்பள்ளிகளில் மிக அதிகமான எண்ணிக்கையில் வளர்ச்சி பெற்றுக்கொண்டிருக்கும் மெட்ரிக் பள்ளிகளை கட்டுப்படுத்துவது எளிதான காரியமில்லை என்பது கல்வித்துறையை நன்கு அறிந்தவர்களுக்கு அன்றும் தெரியும்; இன்றும் தெரியும். “பிரச்சினையை ஆறப் போட வேண்டுமென்றால், அதை ஒரு கமிட்டியிடம் தூக்கிப்போடு” என்பது நிர்வாகத்தின் பாலபாடமென்பதும் தெரியும்.

இருந்தாலும், நல்லது ஏதாவது நடக்காதா, என்ற ஆசையோடு இருப்பவர்களுக்கு சமச்சீர்கல்வி பற்றி அரசு வாய்திறக்காமல் இருப்பது ஏமாற்றமளிக்கிறது. இன்று நடப்பதென்ன? அரசுப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைந்துவருகிறது. விளைவாக பள்ளிகள் எண்ணிக்கையும் குறையும்தானே? மாறாக, மெட்ரிக்பள்ளிகளின் எண்ணிக்கை அசுர வேகத்தில் அதிகரித்து வருகிறது.

கல்வி அதிகாரிகள் ஒவ்வொருமாதமும் தலைமை ஆசிரியர்களின் கூட்டங்களை நடத்துவது வழக்கம். ஒரு காலத்தில், “மெட்ரிக் பள்ளி தலைமை ஆசிரியர்” என்ற இனமே அந்தக் கூட்டங்களில் இல்லாமல் இருந்தது. காலப்போக்கில் கடைசி இருக்கைகளில் ஓரிரு மெட்ரிக்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூச்சத்துடன் நெளிந்துகொண்டு உட்கார்ந்திருந்தனர். அதன்பிறகு “சாம்பலிலும் தமிழ்மணந்து வேகவேண்டும்” என்று ஆசைப்பட்டவர்களின் ஆட்சி வந்தது. இப்போதெல்லாம் மேலே சொன்ன தலைமை ஆசிரியர் கூட்டங்களில் மெட்ரிக்பள்ளி தலைமை ஆசிரியர்களின் ஆதிக்கம் அதிகமாகி, அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் நெளிந்துகொண்டு உட்கார்ந்திருக்கும் காலம் வந்துவிட்டது.

மெட்ரிக் பள்ளிகள் தனியாரின் சொத்துக்கள். அதாவது வருவாய் ஈட்டித்தரும் சொத்துக்கள். மெட்ரிக்பள்ளிகளின் நிர்வாகிகள் இப்போதே கோரிக்கை எழுப்பத் தொடங்கிவிட்டனர். பல இனங்களிலும் வரிக்குறைப்புகோரி குரலெழுப்பத்தொடங்கிவிட்டனர். வரிக்குறைப்பின் மூலம் மாணவர்களின் கல்விக்கட்டணம் குறையுமா என்ன?

அரசுப்பள்ளிகளில் அனுபவம்மிக்க ஆசிரியர்கள் இருக்கிறார்கள். அருமையான கல்விமுறை இருக்கிறது. மாணவர்களை ஆளுமை மிக்கவர்களாக மாற்றும் திறனுடைய ஆசிரியர்கள் இருக்கிறார்கள். குறைபாடு உடைய இடங்களும் இருக்கின்றன. ஆக்கபூர்வமான கண்டிப்பு அந்தக்குறைபாடுகளை நிச்சயமாக நீக்கிவிடும்..

கல்வித்துறையின் குளறுபடிகளால் சமச்சீர்கல்வியை நடைமுறைப்படுத்துவதற்கான சூழல் சிக்கலாகிக்கொண்டுவருகிறது. தற்போது செயல்வழிக்கற்றல் என்ற கற்பித்தல் முறை அரசுப்பள்ளிகளில் கையாளப்பட்டுவருகிறது. இதே முறையை மெட்ரிக்பள்ளிகள் நடைமுறைப்படுத்தாமல் இருப்பதில் இருந்தே, அரசின் கையாலாகாத நிலை வெளிப்படுகிறது. ஏற்கனவே பாடத்திட்டத்தில் இருக்கும் வேறுபாடுகளை இதுபோன்ற புதிய திட்டங்கள் அதிகப்படுத்துமே அன்றி, குறைக்கப் போவதில்லை. எனவே சமச்சீர் கல்வி என்ற தத்துவம் சொல்லிக் கொள்ளாமலேயே விடைபெற்றுக் கொண்டுவிட்டது என்பது நிச்சயமாகத்தெரிகிறது.

அரசுப்பள்ளிகளில் சிறப்புக்கட்டணம் முழுமையாக இரத்து செய்யப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கதுதான். ஆனால் மெட்ரிபள்ளிகளிலும், தனியார் பள்ளிகளிலும் பல்லாயிரக்கணக்கணக்கான ரூபாய்கள் முறையான ரசீது இல்லாமல் நன்கொடை என்கிற பெயரில் வாங்கப்படுவதை எப்படி இந்த அரசு அனுமதிக்கிறது? இந்தப் பள்ளிகளில் தங்களுடைய குழந்தைகளை சேர்ப்பதற்கான விண்ணப்பத்தை வாங்குவதற்கு முந்தைய நாள் நள்ளிரவில் வரிசையில் ஏன் நிற்கவேண்டும்?

கல்வித்துறையின் இன்றைய செயல்பாடுகள் சாதாரணமக்களுக்கு திருப்தியளிப்பதாக இல்லை.

இன்றை நிலையில் தமிழ்நாட்டில் பணம் உள்ளவர்கள் “எதுவும்” படிக்கலாம். பணமில்லாத ஏழைகள் “ஏதோ” படிக்கலாம் என்பதே உண்மை.

- மு.குருமூர்த்தி (cauverynagarwest@gmail.com)

தெய்வங்களும் முரட்டு தெய்வங்களும்


7 முதல் 12 வயதுடைய குழந்தைகளின் உடலில் செயற்கையாக வலியை உண்டாக்கி மூளையின் fMRI ஸ்கேன் எடுத்தார்கள். வலியை உணரும் மூளையின் பகுதியில் ஒரு ஒளிர்தல் காணப்பட்டது.

அடுத்தவர்களுக்கு வலியை ஏற்படுத்தும் வன்முறைக் காட்சியைப் பார்த்தபோதும் இந்தக் குழந்தைகளுக்கு மூளையின் அதே பகுதியில் ஒளிர்தல் காணப்பட்டது. அதாவது குழந்தைகள் அடுத்தவர்களுடைய வலியை தன்னுடைய வலியாக உணர்ந்தார்கள்.

மேலும், சமூக உணர்வுகள் மற்றும் நியாய அநியாயங்களுக்குப்பொறுப்பான மூளையின் பகுதியான the medial prefrontal cortex and the temporoparietal junction களிலும் ஒளிர்தல் காணப்பட்டன.அதாவது அடுத்தவர்களுக்கு வலி ஏற்படுத்துவது தவறு என்ற உணர்வை இயல்பிலேயே குழந்தைகள் பெற்றிருந்தார்கள்.

இதனால்தான் குழந்தைகளை தெய்வங்கள் என்கிறோம். ஆனால் இயல்பிலேயே முரடர்களாக இருக்கும் குழந்தைகளை முரட்டு தெய்வங்கள் என்கிறார்கள் விஞ்ஞானிகள். ஏனென்றால், இவர்கள் அடுத்தவர்களுக்கு வலியை ஏற்படுத்தி அதில் சுகம் காணுகிறார்கள்.

சிகாகோ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மூளையை fMRI ஸ்கேன் செய்து இந்த முடிவை எட்டியிருக்கிறார்கள். ஆளுமையை வெளிப்படுத்தும் ஆய்வுகளில் முதல் முறையாக fMRI ஸ்கேன் பயன்படுத்தப்பட்டுள்ளதாக சிகாகோ பல்கலைக்கழக மனநலம் மற்றும் மனோதத்துவ பேராசிரியர் ஜீன் டெசிட்டி கூறுகிறார்.

குற்றச்செயல்களிலும், வன்முறைகளிலும் ஈடுபடும் பிறழ்மனம் கொண்ட இளையோருக்கு சிகிச்சையளிப்பதில் இந்த ஆய்வு உதவுகிறது. மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் மூளையின் பகுதிக்கு amygdala and ventral striatum என்று பெயர்.

மனிதர்களின் சுயகட்டுப்பாட்டை நிர்ணயிக்கும் மூளையின் பகுதிக்கு the medial prefrontal cortex and the temporoparietal junction என்று பெயர்.

இந்த ஆய்வில் 16 முதல் 18 வயதுடைய எட்டு முரட்டு சுபாவமுடைய இளைஞர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இவர்கள் ஆயுதங்களை ஏந்தி சண்டையில் ஈடுபடுபவர்களாகவும், குற்றச்செயலகளில் ஈடுபடுபவர்களாகவும் இருந்தனர்.

இதே வயதுடைய இயல்பான எட்டு இளைஞர்களும் ஆய்விற்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அடுத்தவருடைய காலை வேண்டுமென்றே ஒருவர் மிதித்து வலிஉண்டாக்குவது போன்ற வீடியோ காட்சி இரண்டு குழுக்களுக்கும் தனித்தனியே போட்டுக் காட்டப்பட்டது. காட்சியைப் பார்க்கும்போது அவர்களின் மூளை fMRI ஸ்கேன் எடுக்கப்பட்டது.

முரட்டுசுபாவம் உடைய இளைஞர்களின் மூளையில்மட்டும் amygdala and ventral striatum நரம்பணுத்தொகுதிகளில் ஒளிர்தல் காணப்பட்டது. அதாவது முரடனுக்கு வன்முறைக் காட்சிகளால் மகிழ்ச்சி ஏற்பட்டது. the medial prefrontal cortex and the temporoparietal junction பகுதியில் அதுபோன்ற ஒளிர்தல் ஏதும் காணப்படவில்லை. அதாவது நியாயம்-அநியாயம் பற்றிய எந்த உணர்வும் அவர்களுக்கு ஏற்படவில்லை.

இயல்பான சுபாவம் உடைய இளைஞர்களின் மூளையின் the medial prefrontal cortex and the temporoparietal junction பகுதியில் மட்டும் ஒளிர்தல் காணப்பட்டது. amygdala and ventral striatum என்ற மூளையின் பகுதியில் ஒளிர்தல் ஏதும் காணப்படவில்லை.

ஆக, பிறக்கும்போது தெய்வமாக இருந்தவன் போகப்போக, முரட்டு தெய்வமாக மாறிப்போகிறான். அதாவது, மிருகமாக மாறிப் போகிறான் என்பதுதான் இன்றைய அறிவியல் நமக்கு உணர்த்தும் உண்மை.

இன்னும் படிக்க:

(http://www.sciencedaily.com/releases/2008/11/081107071816.htm)

விளையும் பயிர் முளையிலே...


விளையும் பயிர் முளையிலே என்பது தமிழ் முதுமொழி. குழந்தைகள் அனைவரும் ஒன்றுபோல் இருப்பதில்லை. முரட்டுத்தனம், அடுத்த குழந்தையை தாக்குதல் ஆகிய குணங்கள் சில குழந்தைகளிடம் இயல்பிலேயே இருப்பது உண்டு. பள்ளிப்பருவத்தை எட்டும் முன்பாகவே குழந்தைகளின் கூட்டுணர்வுத்திறன் வெளிப்பட்டு விடுகிறது என்பது ஆராய்ச்சியின் முடிவு.

பள்ளி செல்லும் வயது அடையாத குழந்தைகளுக்காக முன்பருவ பள்ளிக்கூடங்கள் நடத்தப்படுகின்றன. மற்ற குழந்தைகளுடன் கலந்து பழகும் வாய்ப்பு இந்த பள்ளிகள் மூலம் கிடைக்கிறது. சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நற்பழக்கங்கள் இந்தப் பள்ளிகள் மூலம் விதைக்கப்படுகின்றன. குழந்தைகளுக்கு அவர்களுடைய உணர்வுகளைக் கட்டுப்படுத்தும் பயிற்சிகூட இங்குதான் கிடைக்கிறது. சில குழந்தைகள் இயல்பிலேயே முரட்டுத்தனம் வாய்ந்தவர்களாயும், மற்ற குழந்தைகளைத் தாக்கும் குணமுடையவர்களாயும் இருப்பார்கள். பள்ளியின் செயல்பாடுகளில் ஈடுபாடு இல்லாதவர்களாயும் இருப்பது இயல்பானதுதான். இப்படிப்பட்ட குழந்தைகளின் நட்புவட்டம் சிறியதாக இருக்கும். பிற்காலத்தில் வளர்ந்தபின்னரும் கூட சமூகத்தில் மற்றவர்களிடம் நல்ல உறவை இவர்கள் ஏற்படுத்திக்கொள்வதில்லை.

சிறுவர்களின் கூட்டுணர்வைக் குறித்த ஆய்வு அரிசோனா பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்டது. ஆறு முன்பருவ பள்ளிகளின் வகுப்பறைகளில் இருந்து 97 குழந்தைகள் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டனர். குழந்தைகளின் நடத்தைகளைப் பற்றிய தகவல்களை அவர்களின் ஆசிரியர்கள் கொடுத்தனர். Q-connectivity முறையில் ஒவ்வொரு குழந்தையும் எத்தனை குழந்தைகளுடன் உறவாடியது, எத்தனை முறைகள் உறவாடியது, அவர்களின் முரட்டுத்தனத்தின் அளவு, வகுப்பில் ஈடுபாடு இவையனைத்தும் சேகரிக்கப்பட்டு அலசி ஆராயப்பட்டது.

முரட்டுத்தனம், கோப உணர்வு, வகுப்பில் ஈடுபாடு காட்டாமை ஆகிய குணங்களைக் கொண்ட குழந்தைகளுக்கு மிகக்குறைவான நண்பர்கள் மட்டுமே இருந்தனர். மாறாக மென்மை, நன்கு பழகும் குணம் இவற்றுடன் வகுப்பில் ஈடுபாடு காட்டும் குழந்தைகளின் நட்புவட்டம் பெரியதாக இருந்தது. இந்த முடிவுகள் முன்பருவபள்ளி வயதினருக்கு மட்டுமல்லாது வளர்ந்த பிள்ளைகளுக்கும் பொருந்துவதாக அமைந்திருந்தன. இந்த முடிவுகள் ஆண் பெண் குழந்தைகளுக்குப் பொதுவாக இருந்தன.

The Child is The Father of The Man என்பார்கள். குழந்தைகளே இப்படியென்றால் சமூகமும் அப்படித்தானே இருக்கும். விதையொன்று போட்டால் சுரையொன்று முளைக்குமா என்ன?

இன்னும் படிக்க: http://www.sciencedaily.com/releases/2008/07/080715071428.htm

ஈறுகெட்ட நாகரிகம்


வேட்டையாடி பிழைத்துவந்த வாழ்க்கையை விட்டு வேளாண்மை செய்து பிழைக்கும் நிலைக்கு மனிதன் வாராதிருந்தால் நாடு, நகரம், அறிவியல் தொழில் நுட்பம் என்று எதுவுமே ஏற்பட்டிருக்காது. பத்தாயிரம் வருடங்களுக்கு முன்னால் மனிதன் வேட்டைக்காரனாகத் தானிருந்தான். அவனது பற்களின் பலத்தையும், பெரிய தாடையின் அளவையும் இன்றைய மனிதனுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், நவீன மனிதனின் பற்கள் வெறும் அவலுக்கு சமம். தாடை கூட சிறியதாகி உள்வாங்கிக் கொண்டிருக்கிறது.
பல்துலக்காமல் இருந்தும், பல்சொத்தையில்லாமலேயே வேட்டை மனிதன் வாழ்ந்தான். இன்று பல்லுக்கென்று மனிதன் எத்தனை நேரத்தையும் பொருளையும் செலவு செய்கிறான்! இந்த மாற்றத்திற்குக் காரணம் வேகவைத்த அரிசி, கோதுமை உணவை சாப்பிடுவதுதான். அதிக கார்போஹைட்ரேட் மிகுந்த உணவின் மூலம் நாம்பெற்ற தீமைகள் இவை. வேலைக்காக மனிதன் பெருங்கூட்டமாக நகரத்தில் வாழ ஆரம்பித்ததும்தான் சிப்பிலிஸ், காசநோய், தொழுநோய் போன்ற நோய்களும் தோன்ற ஆரம்பித்தன. நாகரிகத்தில் முன்னேறிச் சென்றால், ஆரோக்கியம் பின்னோக்கிச் சென்றுவிடுகிறது.

நன்றி:
கலைக்கதிர், ஜூலை 2008

Friday, February 27, 2009

வரவேற்போம்...வாழ்த்துவோம்...

தமிழ்நாட்டின் பள்ளிக்கல்விக்கென ஒரு இணையதளம் உருவாகி இருப்பது மகிழ்ச்சியான செய்தி.
தமிழக பள்ளிக்கல்வித்துறை எதிர்கொள்ளும் சவால்கள் ஏராளம்!
தரமான இலவசக்கல்வி எல்லோரையும் சென்றடைய
தோள் கொடுப்போம்!
துணை நிற்போம்!
மு.குருமூர்த்தி,
ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர்
மற்றும் உதவிக்கல்வி அலுவலர்,
101, காவேரி நகர் மேற்கு,
தஞ்சாவூர்-613005