Monday, March 9, 2009

இது கொஞ்சம் நாற்றம் பிடித்த விஷயம்...
அரசே நலம். நலமறிய ஆவல்.


ரொம்பநாளாக எழுத ஆசைப்பட்ட விஷயம் ஒன்று இருக்கிறது. கொஞ்சம் நாற்றம்பிடிச்ச விஷயம். படிக்கும்போது மூக்கை வேண்டுமானால் மூடிக்கொள்ளுங்கள். மனதை மட்டும் திறந்துகொள்ளுங்கள்.


எவ்வளவோ நவீன கருவிகள் வந்துவிட்டன. இன்னமும் மனிதன் சாக்கடைக்குள் மூழ்கி அடைப்பை நீக்கவேண்டியிருக்கிறது அரசே!


தினமும் சாக்கடைக்குள் தலைமுழுகி மலத்தைவாயில் ஏந்தும் துப்புரவுத் தொழிலாளிகளை நினைக்கவேண்டிய நேரம் வந்துவிட்டது அரசே!


நம்முடைய குடல் நாறிப்போகாமல் கக்கூசுக்குள் தள்ளுவது நம்பாடு! அதற்கப்புறம் அந்தக்கருமத்தை பாதாள சாக்கடைக்குள் தள்ளிவிடுவது துப்புரவுத்தொழிலாளியின் பாடு!


எல்லாத்துறைகளிலும் ஆராய்ச்சிக்காகவும் வளர்ச்சிக்காகவும் ஒரு பிரிவு இருக்கும். சாக்கடைக்குள் மலத்தைத் தள்ளும் துறையில் மட்டும் ஆய்வும் ஆராய்ச்சியும் ஏன் செய்வதில்லை? செய்வதற்கு விஷயம் இல்லையா? புதிய கருவிகள் ஏதும் இல்லையா? நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் மேடைக்குமேடை நீங்கள் சுட்டிக்காட்டிக்கொண்டிருந்த ஜெர்மனியிலும், ஜப்பானிலும், சிங்கப்பூரிலும் மனிதர்கள்தான் மனிதமலத்தை சாக்கடைக்குள் தள்ளிவிடுகிறார்களா அரசே!


அய்யன் திருவள்ளுவர் ஓலைச்சுவடியில் எழுதினார் என்பதற்காக நாமும் ஓலைச்சுவடியும் எழுத்தாணியும் வைத்துக்கொண்டு அலைவதில்லை.


சாக்கடை அள்ளுவதில் மட்டும் இன்னும் நவீனத்துவம் வரவில்லை. அப்புறம் எப்போது பின் நவீனத்துவம் வரப்போகிறது?


அடைபட்ட சாக்கடைக்குள் மூழ்கி இறந்துபோன தொழிலாளர்களில் பெரும்பாலோரின் வயது 19ல் இருந்து 35 வயதுக்குள் என்கிற புள்ளிவிவரம் கொஞ்சம் நெருடலாக இருக்கிறது அரசே!"காலைல 5.30 மணிக்கு எழுந்து குளிச்சிட்டு , என் 22 நாள் கொழந்தய கொஞ்சிட்டுப் போன எங்கப்பா திரும்பி பொணமா தான் வந்தாரு" என்கிறார், சாக்கடையில் அடைப்பு எடுக்க இறங்கி மூச்சுத் திணறி செத்துப்போன பிரபுவின் மகள் ஜோதி.


ஜோதியின் வாக்குமூலத்தில் நீங்கள் ஒரு திரைக்கதை எழுதவதற்கு தேவையான கரு இருப்பது எழுத்தாளர்களாகிய எங்களுக்கும் தெரியும். எங்களின் முன்னோடியான உங்களுக்கும் தெரியும்.


திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகில் உள்ள கடலாடி கிராமத்தில் இருந்து சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு பிழைப்புத் தேடி சென்னை வந்தவர் பிரபு. சாதி பலமும், பண பலமும் இல்லாத அவருக்கு சாக்கடை மூழ்கும் தொழிலே வாழ்வு கொடுத்தது. ஒரு நாள் வழக்கம் போல சாக்கடை அடைப்பு எடுக்கும் வேலைக்குச் சென்றார். அம்பத்தூர் எஸ்டேட் பகுதியில் ஏற்பட்ட அடைப்பை நீக்க சாக்கடைக்குள் இறங்கினார். சாக்கடையின் வாய் சிறியதாக இருந்ததால் வாயு நெடி தாக்கி மூச்சுத் திணறல் ஏற்பட்டு சாக்கடைக்குள்ளேயே துடித்தார். இதனை பார்த்துப் பதறிப்போன அவரின் 19 வயது மகன் சாக்கடைக்குள் குதித்தார். இந்த சமூகம் தூய்மையாக வாழ வேண்டும் என்பதற்காக உழைத்த இவர்கள் இருவரும் சாக்கடையில் உயிர் துறந்தனர்.


இந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்துக்கொண்டு தேர்தல் நேர வசனங்களும், சுவரொட்டிகளும் எவ்வளவோ உருவாக்கலாம். அந்த சாமர்த்தியமுள்ள எதிர்க்கட்சிதான் இப்போது நாட்டில் இல்லை.


நீங்கள் உருவாக்காத கோஷங்களா, அரசே?


"கூலி உயர்வு கேட்டான் அத்தான்...குண்டடிபட்டு செத்தான்."


"குடல் எரியுது; கும்பி கருகுது; குளு குளு ஊட்டி ஒரு கேடா?"


"ஆண்டது போதாதா? மக்கள் மாண்டது போதாதா?"


"உடல் மண்ணுக்கு; உயிர் தமிழுக்கு."


இவையெல்லாம் அந்தக்கால தேர்தல் வசனங்கள். சுவர்களில் எழுதப்பட்டவை; சாலைகளில் கூவப்பட்டவை; எங்களால் விரும்பப்பட்டவை; மாற்றத்தை ஏற்படுத்தியவை.


தமிழ்நாட்டில் மனித உயிர்கள் மலிவானவை என்ற அவச்சொல் வேண்டாம் அரசே!


ஜோதியின் குடும்பத்திலும், பிரபுவின் குடும்பத்திலும் கூட புத்திரபாசமும் தந்தைப்பாசமும் இருக்கும் என்பது உண்மைதானே!


அடுத்தமுறை கக்கூசுக்குள் நாம் இருக்கும்போது இந்த ஏழைகளைபற்றிய நினைவு நமக்குள் இருக்கவேண்டும் அரசே!

No comments:

Post a Comment