Saturday, March 7, 2009

உறங்கிப்போன மின்வாரியமும் உறங்காத தமிழர்களும்

மின்சார உற்பத்தியில் மிகை மாநிலமாக இருந்த தமிழகத்தை மின்பற்றாக்குறை மாநிலமாக்கியுள்ளது தி.மு.க ஆட்சி " சொல்பவர் ஜெயலலிதா.

"சென்ற அ.தி.மு.க ஆட்சி காலத்தில் மின்சார உற்பத்திக்காக எந்த திட்டமும் செயல்படுத்தாமல் விட்டது தான் இப்போதைய மின்சாரதட்டுப்பாட்டுக்கு காரணம்" பதில் சொல்பவர் ஆற்காடு வீராச்சாமி.

பரவாயில்லை. பதில்சொல்லும் ஒரு அமைச்சர் கிடைத்திருக்கிறார் மின்வாரியத்துக்கு.

தலைமைச்செயலர் கூறுவதையும் படித்துவைப்போம்.

"மின்சார தட்டுப்பாடு தற்காலிகமானதுதான். மழைக்காலம் தொடங்கியபிறகு மின் தட்டுப்பாடு நீங்கிவிடும். பருவமழை 15 நாட்களுக்கு முன்பே தொடங்கிவிட்டது. நிலைமை சீரடையும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்."

புள்ளிவிவரம் கொடுப்பதுதான் அதிகாரியின் லட்சணம் என்பதை நினைவில் கொள்க.

தொழிற்சாலைகளில் உற்பத்தி நிறுத்தம் அமல் செய்யப்பட்டுள்ளதே, அது விலக்கிக்கொள்ளபடுமா என்ற கேள்விக்கு "நாங்கள் நம்புகிறோம் " என்கிறார்.
அதிகாரிகளுக்கே உரிய சுருக்கமான பதில்.

மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு பரவாயில்லையாம். அரசாங்கம் தன்னால் ஆகக்கூடியதெல்லம் செய்கிறதாம். தேசிய மின் தொகுப்பில் இருந்து மின்சாரம் பெறுவதில் சிரமம் இருக்கிறதாம்.

தேசியத்திற்குள்தான் தமிழ்நாடும் இருக்கிறது என்று தமிழர்கள் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

அனைவருமே பல உண்மைகளை மறைத்து, மக்களை திசைதிருப்பவே அறிக்கை யுத்தம் நடத்துகின்றனர். மின்சார உற்பத்தியில் தமிழகம் எப்போது மிகை மாநிலமாக இருந்தது...?
ஜெயலலிதா ஆட்சி செய்த 10 ஆண்டு காலத்தில் மின்உற்பத்திக்காக தொலைநோக்குத் திட்டங்கள் எத்தனை போடப்பட்டன?

கருணாநிதி தலைமையில் தி.மு.க ஆட்சி செய்த சுமார் 14 ஆண்டுகளில் தொலைநோக்குப் பார்வையுடன் எத்தனை மின்உற்பத்தி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன?

இரண்டு கேள்விகளுக்குமே ஒரே விடை, இரு கழகங்களின் ஆட்சிகளிலுமே தமிழகம் மெல்ல, மெல்ல இருளுக்குள் தள்ளப்பட்டது என்பது தான்!

கருணாநிதி ஆட்சியிலிருந்த காலகட்டத்திலும் சரி, ஜெயலலிதா ஆட்சி யிலிருந்த காலகட்டத்திலும் சரி தமிழக மின்உற்பத்தி சுமார் 10 முதல் 30 சதவிகிதம் மட்டுமே அதிகரித்தது.

பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியிலிருந்த ஒவ்வொரு ஐந்தாண்டுகாலத்திலும் சுமார் 120 சதவிகிதம் மின் உற்பத்தியை அதிகப்படுத்தினார். இத்தனைக்கும் அவர் ஆட்சி செய்த கால கட்டத்தில் தொழிற்சாலைகளின் வளர்ச்சி இப்போதைய காலத்தைப் போல் இவ்வளவு வேகமான விஸ்வரூப வளர்ச்சியை காணவில்லை.

மின் உற்பத்திக்கான திட்டங்கள் என்பவை காலங் கனிந்து பயன்தரக்கூடியவை. அதாவது இப்போது முதலீடு செய்தால் குறைந்தது ஆறேழுவருடங்கள் கழித்துதான் அறுவடை செய்யலாம். அப்போது ஆட்சி மாறிப் போனால் அது புதிய ஆட்சிக்கு பெயர் தந்துவிடுமே.... என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.

மக்கள் நலன், நாட்டுமுன்னேற்றம் சார்ந்த தொலைநோக்கு திட்டங்கள் இவற்றையெல்லாம் யோசிக்கக்கூடாது. உடனடியாக மக்கள் பலனடைய வேண்டும். அதன் காரணமாக ஓட்டுகளை குவிக்கவேண்டும் என்பதற்காக இலவசங்களை அள்ளி இறைக்கும் திட்டங்களுக்கே நிதியை திருப்பிவிடலாம் என்பதே இரு கழகங்களின் நடைமுறையாக இருந்துள்ளது.

இது மட்டுமல்ல, மின் வாரியத்தில் 'ஷாக்' அடிக்கும் படியான நிர்வாக சீர்கேடுகளும் வேறு மலிந்துவிட்டன. இதன் விளைவாக உற்பத்தியாக வேண்டிய மின்சாரமே கூடதடைபட்டுள்ளது.

பகலில் ஆலைகளை இயக்காமல் இரவில் இயக்குங்கள்;
வாரத்துக்கு ஒருமுறை எந்திர இயக்கத்தை நிறுத்தி வையுங்கள்.''
தமிழக மின்துறை அமைச்சர் வைத்துள்ள வேண்டுகோள்கள்.

1960களில் அன்றைய பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி ""வாரத்துக்கு ஒருநாள் பட்டினி கிடப்பீர்'' என்று நாட்டு மக்களுக்குச் செய்த உபதேசத்துக்குச் சற்றும் குறையாத பொறுப்பற்ற யோசனைகளே இவை.

பொன்விழா கொண்டாடிய தமிழ்நாடு மின்சார வாரியம், தமிழகத்தின் தேவையைவிட அதிகமாக மின்னுற்பத்தி செய்வதாக நாட்காட்டிகளில் கூடச் சாதனையாக அறிவித்துள்ளது. அமைச்சர் வீராசாமியே பலமுறை இதனைப் பெருமையாகக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் நடைமுறையில், உண்மை நிலவரமோ வேறுவிதமாக உள்ளது.

கடந்த மூன்று மாதங்களாக தமிழகமெங்கும் அறிவிப்பின்றியே அடிக்கடி மின்சாரம் நிறுத்தப்படுகிறது. ஏற்கெனவே நேரம் தவறி விவசாயத்துக்கு வழங்கப்பட்டு வந்த மின்சாரமும் அடிக்கடி மின்தடையால் நின்று போய், நீர்ப்பாய்ச்சலின்றி விவசாயம் தத்தளிக்கத் தொடங்கியுள்ளது.

மாநிலத்தின் பல பகுதிகள் குடிநீர்த் தட்டுப்பாட்டினால் தவிக்கின்றன. பல லட்சம் தொழிலாளர்களின் வாழ்வுக்கு ஆதாரமான நெசவாலைகளுக்கும் விசைத்தறிகளுக்கும் தொடர்ச்சியாக மின்சாரம் கிடைக்காததால், கோவைதிருப்பூர் பகுதிகளில் நெசவுத் தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

பின்னலாடைத் தொழிலில் கூட மின்சாரத் தட்டுப்பாட்டை ஜெனரேட்டர்களை வைத்து இயக்கி சமாளித்துவிட முடியும். ஆனால், விசைத்தறியோ கடும் மனித உழைப்பைக் கொண்டு குறைந்த லாபத்தில் இயங்கும் தொழிலாகும். இத்தொழிலுக்கு தினமும் 5 மணி நேர மின்வெட்டு என்றால், அத்தொழில் எவ்வளவு பாதிக்கப்படும் என்று சொல்லத் தேவையில்லை. இப்பாதிப்புகள் அனைத்தும் தொழிலாளர் தலையில் சுமத்தப்பட்டு, அவர்களது ஊதியமும் கணிசமாகக் குறைந்துள்ளது.

கோவை, ஈரோடு மாவட்டங்கள், தமிழகத்தின் மின்சாரத்தில் 13.5%ஐ நுகரும் அளவுக்கு நெசவாலைகள், நூற்பாலைகளைக் கொண்டுள்ளன. இப்பகுதிகளில் பல சமயங்களில் 8 மணி நேரம் வரை மின்வெட்டு நீடிக்கிறது. இதனால் நெசவாலைகளும் நூற்பாலைகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளது. ஏற்கெனவே அமெரிக்க டாலரின் மதிப்பு வீழ்ச்சியால் 15%க்கு மேல் இலாபத்தில் சரிவைக் கண்டுள்ள நெசவுத் தொழிலை மின் பற்றாக்குறையானது மேலும் நலிவடையச் செய்துவிடும் என்று தென்னிந்திய ஆலை அதிபர்கள் சங்கம் கூறுகிறது. இதுதவிர, தமிழகமெங்கும் பல்லாயிரக்கணக்கான சிறுதொழில் நிறுவனங்கள் தொடரும் மின்வெட்டால் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.

அரசு புள்ளி விவரங்களின்படி தமிழகத்தின் மொத்த மின்உற்பத்தி 10,000 மெகாவாட் ஆகும். இதில் 55% தமிழக அரசின் மின் உற்பத்தி நிலையங்களிலிருந்தும் 28% மத்திய அரசின் மின் உற்பத்தி நிலையங்களிலிருந்தும் 11% தனியார் மின் உற்பத்தி நிலையங்களிலிருந்தும் 3.5% வெளி மாநிலங்களிலிருந்தும் பெறப்படுகிறது.

இது தவிர, காற்றாலைகள் மூலம் ஏறத்தாழ 3000 மெகாவாட் மின்சாரம் கிடைக்கிறது. இருப்பினும், மின்வெட்டு தொடரக் காரணம் என்ன?

காற்றாலைகள் மற்றும் நீர்மின் திட்டங்களிலிருந்து அண்மைக் காலமாக மின் உற்பத்தி எதிர்பார்த்த அளவுக்குக் கிடைக்கவில்லை. இதுதான் மின்சாரத் தட்டுப்பாட்டுக்குக் காரணம் என்கிறார் அமைச்சர் வீராச்சாமி.

நல்லவேளை...வாயுபகவானுக்காகவும், வருணபகவானுக்காகவும் சிறப்பு வேள்வி செய்யுங்கள் என்று மின் துறை அமைச்சர் மக்களுக்கு யோசனை சொல்லவில்லை.

அணைகள் அனைத்தும் நிரம்பி வழியும் இந்நேரத்தில் மின்உற்பத்தி எப்படி முடங்கிப் போகும்?

மேலும், காற்றாலைகள் மூலம் கிடைக்கும் மின்சாரம் மிகக் குறைவானதுதான். ஆனால், தற்போதைய மின்தட்டுப்பாடோ 30%க்கு மேலாக இருக்கிறதே, அதற்குக் காரணம் என்ன?
கடந்த இருபது ஆண்டுகளாக மின்னுற்பத்தியிலும் மின் விநியோகத்திலும் புழங்கிவரும் எந்திரங்களோ, கருவிகளோ புதுப்பிக்கப்படவில்லை; சீரமைக்கப்படவில்லை. மின்தடையைப் பழுதுநீக்கி சரிசெய்யும் துறையிலும் பராமரிப்பிலும் பல்லாயிரக்கணக்கான காலி இடங்கள் நிரப்பப்படாமல், தற்காலிகத் தொழிலாளர்களை வைத்து சமாளித்து வருகின்றனர். சென்ற ஆட்சியில் கோரப்பட்ட ஒப்பந்தப் புள்ளிகள் இறுதியாக்கப்பட்டு முடிக்கப்படாததால் பல வேலைகள் கிடப்பில் உள்ளன. இத்தகைய நிர்வாகச் சீர்கேடுகளும் குளறுபடிகளுமே மின்தடைக்கு முக்கிய காரணங்களாகின்றன.

'அடுத்த மாநிலங்களிலிருந்து மின்சாரத்தை வாங்கி சமாளிப்பேன்' என்று சொல்லும் ஆற்காடு வீராச்சாமி இருக்கிற மின்உற்பத்தி நிலையங்கள் சிறப்பாக செயல்படாமல் சீரழிந்துவருவதைப் பற்றி சிந்திப்பதில்லை. ஆனால் அவருக்கோ எப்போதும் முதலமைச்சரின் நிழல்போல அவரை பின்தொடர்வதற்கே நேரம் போதவில்லை. தமிழகத்தில் மின்பற்றாக்குறை என்ற தலையாய பிரச்சனையில் தலையிடுவதற்கு அவருக்கு எங்கே நேரம் கிடைக்கிறது? அதற்குத்தான் அதிகாரிகள் இருக்கிறார்களே அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். அது அவர்களின் பாடு... என்பதே அமைச்சரின் அணுகுமுறையாக உள்ளது.

ஆனால் அதிகாரிகள், இருக்கும் வாய்ப்புகளுக்குள் இருந்துதான் இயங்க முடியும். அவர்களால் கொள்கை முடிவுகள் எடுக்க முடியாது. உதாரணமாக கடந்த 17 ஆண்டுகளில் மின் உற்பத்திக்காக ஒதுக்கப்படும் நிதியில் 40 சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளது

எதற்காக இப்படி ஒரு நடவடிக்கை?

கூடுதலாக மின் உற்பத்திக்கு நிதி தேவைப்படும் காலகட்டத்தில் அதை குறைக்க வேண்டியதற்கான காரணத்தை விளக்க வேண்டிய பொறுப்பு ஜெயலலிதா, ஆற்காடு வீராச்சாமி இருவருக்குமே உள்ளது
.
இது மட்டுமல்ல, அரசாங்கம் முதலீடு செய்தபோது குறைந்த செலவில் பெறமுடிந்த மின்சாரத்தை தனியார் கைகளுக்கு தாரைவார்த்து அதை எட்ட முடியாத உயரத்திற்கு கொண்டு போனபோதிலும் இரு கழகங்களும் இறுமாப்பு கொள்ளலாம்.

தனியார் மின்உற்பத்தி செய்ய தாராள சலுகைகளை அள்ளித்தந்தது தமிழக அரசு, அவர்கள் உற்பத்தி செய்த மின்சாரத்தை அதிக விலை தந்து வாங்கிய வகையில் அடைந்ததோ அபார நஷ்டம்.

தனியார் மின் உற்பத்தியில் இறங்காத காலகட்டம்வரை நமது மின்வாரியம் ஒரு பற்றாக்குறையற்ற வாரியமாகவே பரிமளித்தது. ஆனால் தனியார் நிறுவனங்கள் தந்த நிர்பந்தங்களால் தமிழக மின்வாரியம் இன்று 3000 கோடி பற்றாக்குறையில் மூழ்கிவிட்டது. இத்தனை இழப்புகளுக்குப் பிறகு தமிழக மக்களின் மின்தேவையில் தனியார் நிறுவனங்கள் தந்த மின்சாரத்தின் மூலம் வெறும் 9 சதவிகிதத்தை மட்டுமே ஒப்பேற்ற முடிந்துள்ளது.

இந்தச் சூழலில் அமைச்சர், "வணிக ரீதியில் 25,000 மெகாவாட் மின்உற்பத்தி செய்ய தனியாருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மூன்று வருடத்தில் இந்த மின்சாரம் கிடைத்துவிடும் என அறிவித்துள்ளார். ஆனால் இது சாத்தியமே இல்லை, வெறும் சவடால்தான் என்கிறார்கள் இத்துறை நிபுணர்கள்.

இலவச டிவி பெட்டிகள் வழங்கியபிறகு 1,20,256 புதிய இலவச இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இலவச கலர் டெலிவிஷன்களுக்கு பலநூறுகோடி செலவழிக்க முடிந்த தமிழக அரசுக்கு பல்வேறு வகையிலும் அடிப்படை, அத்தியாவசிய தேவையாகிப்போன மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு முதலீடு செய்ய மனமில்லை என்பது கவலையளிப்பதாக உள்ளது.

"வட மாநிலங்களைவிட தமிழகத்தில் மின்வெட்டு குறைவுதான். மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை தொழிற்சாலைகள் ஜெனரேட்டர்களை பயன்படுத்தவேண்டும்..." இப்படியெல்லாம் சொல்வது அவமானகரமானது என்பதைக்கூட உணராதவர்கள்தான் இன்று ஆட்சியிலும், அதிகாரத்திலும் உள்ளனர்.

உணவு, உடை, இருப்பிடத்திற்கு அடுத்த நிலையில் இருக்கும் அத்தியாவசிய தேவையான மின்சாரத்தில் அலட்சியம் காட்டுபவர்களை வாழும் தலைமுறைமாத்திரமல்ல, வருங்காலத் தலைமுறையும் மன்னிக்காது.

உத்தேசிக்கப்பட்ட பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தாமல் கிடப்பில் போட்டதும்கூட இந்தப் பற்றாக்குறைக்கு ஒரு காரணமாகச் சொல்லலாம்.

1. தூத்துக்குடியின் தமிழ்நாடு மின்சார வாரியமும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனமும் இணைந்து 1,000 மெகாவாட் உற்பத்தி செய்யும் மின் உற்பத்தி நிலையத்தை அமைக்க திட்டங்கள் இருந்தபொழுதும் அதை நிறைவேற்றக்கூடிய வகையில் விரைவான செயல்பாடுகள் இல்லை.
2. ஜெயங்கொண்டான் தமிழ்நாடு மின்வாரியம், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் இணைந்து 500 மெகா வாட் மின்உற்பத்தி செய்யக்கூடிய திட்டமும் நிறைவேற்றப்படவில்லை.
3. குந்தாவில் 500 மெகாவாட் மின்உற்பத்தி செய்யக்கூடிய அளவில் திட்டங்கள் இருந்தபொழுதும் தமிழ்நாடு மின்சார வாரியம் அதைக் கவனிக்காமல் இருக்கிறது.
4. நெல்லை மாவட்டம் உடன்குடியில் 1,500 மெகா வாட் உற்பத்தி செய்யும் நிலையத்தை அமைக்க தமிழ்நாடு அரசு சுணக்கம் காட்டுகிறது.
5. வடசென்னை மின்உற்பத்தி நிலையத்தில் இருந்து மேலும் 600 மெகா வாட் உற்பத்தியை அதிகரிக்க திட்டங்கள் இருந்தும் அதற்கான செயல்பாடுகள் இல்லை.
6. இதேபோன்று மேட்டூரிலும் 500 மெகா வாட் மின் உற்பத்தி அதிகரிக்கக்கூடிய சூழல் இருந்தும் தமிழ்நாடு அரசு பாராமுகமாக இருக்கிறது.
7. கோயம்பேடில் அன்றாடம் கிடைக்கின்ற காய்கறிக் கழிவில் இருந்து மரபுசாரா எரிசக்தி மூலம் 550 மெகா வாட் கிடைக்கக்கூடிய அளவுக்கு மின்உற்பத்தி செய்யலாம் என்ற திட்டமும் நடைமுறைக்கு வரவில்லை.
8. தமிழகத்தில் உள்ள காற்றாலைகளுக்குத் தேவையான காற்று வீசவில்லை என்ற காரணத்தால் உரிய உற்பத்தி இல்லை என்று தமிழக அரசு குறிப்பிட்டாலும், இத்துறை தனியார் வசம் இருப்பதால் அதற்குத் தேவையான வசதிகளையும் கட்டுப்பாடுகளையும் அரசு செய்யாததால் காற்றாலைகள் மின்உற்பத்தி பின்தங்கியுள்ளன.

தொலைநோக்குப் பார்வை இல்லாமல் மின்துறை சீரழிவை நோக்கிச் செல்கிறது. அண்மையில் நம்முடைய முதல்வர் 'சில அமைச்சர்களின் செயல்பாட்டில் தனக்கு திருப்தியில்லை' என்று கூறியதுகூட மின் துறையையும், மணல் கொள்ளையையும் மனதில் வைத்துக்கூறியிருக்கலாம் என்றுகூட நமக்கு சந்தேகம் எழுகிறது.

கணக்கற்ற பன்னாட்டு நிறுவனங்களுடனும் பெருமுதலாளிகளுடனும் தமிழக அரசு போட்டுக் கொண்டிருக்கும் ஒப்பந்தங்கள் 24 மணி நேரத் தங்குத் தடையற்ற மின் வழங்கலை முன்னிபந்தனையாகக் கொண்டுள்ளன. புதிதாக உருவாகி வரும் 120 தொழில் பூங்காங்களால் மட்டும் 700 மெகாவாட்டுகள் வரை மின்தேவை கூடுதலாகியுள்ளது.

ஆனால், கூடுதல் மின்தேவையை ஈடு செய்யும் வகையில் மின் உற்பத்தி அதிகரிக்கப்படவில்லை. அதிக உற்பத்தியை ஈட்டி, அடுத்தடுத்து தங்கப்பதக்கம் வெல்லும் மேட்டூர் மின்நிலையத்திலும் ஊழியர் பற்றாக்குறை நிலவுவதிலிருந்தே அரசின் நிர்வாகச் சீர்கேட்டைப் புரிந்து கொள்ள முடியும்.

உள்ளூர் தொழிலுக்கும் விவசாயத்துக்குமான மின்சாரத்தை வெட்டி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள தமிழக அரசு, அதேநேரத்தில் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் தொழில் பூங்காக்கள், பன்னாட்டு நிறுவனங்கள், கணினி தொழில்நுட்ப நிறுவனங்கள் முதலானவற்றுக்குத் தடையின்றி மின்சாரத்தை வழங்கிக் கொண்டிருக்கிறது. இதன்மூலம், அரசின் மின் விநியோகத்தின் மீது அவநம்பிக்கை உருவாகவும், தனியார் மின்சார விநியோகத்தை மக்கள் இயல்பாக ஏற்றுக் கொள்ளச் செய்யவுமான எதிர்விளைவையே உருவாக்கி வருகிறது.

மின்வெட்டால் கடும் பாதிப்புக்குள்ளான தமிழகம், நிர்வாகக் குளறுபடிகளைச் சீரமைத்தால் நெருக்கடியிலிருந்து மீண்டு விட முடியும். ஆனால் தனியார்மயம், தாராளமயம், உலகமயம் எனும் கொள்கைகள் தமிழ்நாட்டு மக்களை மீளமுடியாத மரணக்குழியில் தள்ளிக்கொண்டிருக்கின்றன.

தமிழகத்தையும் நாட்டையும் தாராளமயமாக்கல் என்னும் கொள்ளைநோய் சூறையாடிக் கொண்டிருக்கிறது. எதிர்க்கட்சிகள் மின்வெட்டினால் ஏற்பட்டுள்ள பாதிப்பை வைத்து போராட்டங்களை நடத்தி மக்கள் பிரச்சினைகளுக்குப் போராடுவதைப் போல நாடகமாடிக்கொண்டிருக்கின்றன.

மையமான விவகாரத்தை விட்டுப் பக்கவாட்டில் ஒதுங்கிக் கொண்டு போராட்டம் நடத்தும் இந்த ஓட்டுக் கட்சிகள், தலைக்கே பேராபத்து வந்துள்ளபோது தலைவலிக்கு மருந்து கேட்கின்றன.

1 comment:

பித்தன் said...

அருமையான பதிவு நண்பரே..யாருக்கும் ஒட்டு போட்டாலும் நமது வாழ்வு வளம் அடையாது போன்று தோன்றுகிறது .. இவை எல்லாம் என்னும் போது நம் சமுதாயதற்கு ஜனநாயகம் என்பது சரியான தீர்வா என்னும் பயம் உருவாகிறது .

இவர்களை போன்ற அரசியல் வாதிகளால் நமக்கு நாமே குழி தோன்றிக்கொண்டு இருக்கிறோம்.

Post a Comment