Friday, April 30, 2010

அதெல்லாம் பழகிப்போயிட்டுதுங்க...

கல்வியும் மருத்துவமும் பணம்படைத்தவர்களுக்கே என்பது நமக்கு பழக்கமாகிவிட்டது.

அரசுப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துகொண்டிருக்கிறது.

அரசுப்பள்ளிகளின் மீது நம்பிக்கையிழப்பு, ஆங்கில மோகம் இவற்றால் தனியார் பள்ளிகள் மதுக்கடைகளுக்கு ஈடான எண்ணிக்கையில் பெருகி வருகின்றன.

தமிழகத்தில் தற்போது இயங்கும் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளிகள், தனியார் உதவி பெறும் பள்ளிகள் இவற்றின் எண்ணிக்கை சுமார் 10,100.

இவையாவும் மக்களின் நன்கொடைகளை நம்பி இயங்கும் பள்ளிகள்.

நன்கொடை என்கிற பெயரில் நடைபெறும் கட்டணக்கொள்ளையை கேள்வி கேட்க நாதியில்லை.

பொதுமக்களின் கடுமையான எதிர்ப்பை நீர்த்துப்போகச்செய்யும் நோக்கத்துடன் தனியார் பள்ளிகளின் கட்டணத்தை நிர்ணயம் செய்வதற்காக ஓய்வுபெற்ற நீதிபதியைக்கொண்ட குழு அமைக்கப்பட்டது.

குழுவும் அதன் பணியை முடித்துவிட்டது.

தனியார் பள்ளிகள் வாரிக்குவிக்கவேண்டிய கட்டணங்கள் பற்றிய அறிவிப்பு மே முதல்வாரம் வெளியிடப்படுமாம்.

பள்ளிகளின் உள் கட்டமைப்பு,
விளையாட்டு மைதானம்,
ஆசிரியர் எண்ணிக்கை,
ஏ சி வகுப்பறைகள்,
ஊரகப்பகுதியில் அமைந்தவை,
மாவட்ட தலைநகரங்களில் அமைந்தவை,
நகராட்சி, மாநகராட்சிகளில் அமைந்தவை,

என்ற அளவுகோள்களில் இந்த கட்டண நிர்ணயம் அமைந்திருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கட்டண அறிவிப்பிற்குப்பிறகு முறையான தகவல் அந்தந்த பள்ளிகளுக்கு தெரிவிக்கப்படுமாம்.

அரசு நிர்ணயிக்கும் கட்டணத்தை பள்ளிகள் ஏற்கலாம் அல்லது மறுக்கலாம்.

ஏற்க மறுப்பவர்கள் குழுவிடம் முறையிடலாமாம்.

அதற்கப்புறம் கோர்ட்டில் மேல் முறையிடக்கூடாதா என்ன?

அப்புறம் என்ன?

தடையாணைதான்.

போனவருடம் வசூலான அதே கட்டணம்.

பெற்றோர்களின் புலம்பல்.

அப்போ.....

கட்டணக்கொள்ளை என்ற கூக்குரல்?

அதெல்லாம் பழகிப்போயிட்டுங்க........

Thursday, April 29, 2010

இதுகூட சமச்சீர் கல்விதான்....

பாலைவன ஒட்டகந்தான்
பள்ளிக்கூடம் போகுது
பாடநூலும் சோறும் நீரும்
பாரமாக சுமக்குது

காலை முதல் மாலை வரை
கழுத்துப்பட்டை நெருக்குது
கால் இரண்டை காலணிகள்
கட்டிப்போட்டு வருத்துது

கூடி ஆடி ஓடும் வயதில்
குனிந்து குனிந்து நடக்குது
குழந்தை முதுகு சின்ன வயதில்
கூன் விழுந்து கிடக்குது

தேடித்தேடி அயல்மொழியில்
திணறிப்பாடம் படிக்குது
தெய்வத்தமிழை வாயில் போட்டு
கடித்துக் கடித்து துப்புது

நேரம் காலம் பார்க்காமல்
நொறுக்குத் தீனி திங்குது
நெஞ்சில் மட்டும் வஞ்சம் இல்லை
நீட்டிப் படுத்துத் தூங்குது

சுந்தரம்
சிறுவர் மணி
20.03.2010

இப்படியொரு கவிதை நம்முடைய பள்ளிச்சூழலை புரட்டிப்போடுமா?

மதுக்கடையில் இருந்து மலஜல கழிப்பறை வரை காசு பார்த்துக்கொண்டிருக்கும் நம்முடைய ஆட்சியாளர்களின் பார்வையில் இந்தக்கவிதை என்ன மாற்றத்தை ஏற்படுத்திவிடப்போகிறது?

இருந்தாலும் படித்தவர்கள் பாவம் செய்யக்கூடாது இல்லையா? அதனால் ஊதுகிற சங்கை ஊதிவைப்போம்.

கேளாச்செவி படைத்த ஆட்சியாளர்கள் மனம் மாறி கேட்டு வைக்கலாம் இல்லையா?


இந்திய நாட்டின் கல்விக்கூடங்களுக்கு எல்லாம் வழிகாட்டும் பொறுப்பில் இருக்கும் தேசீய கல்வி ஆராய்ச்சி கவுன்சில் குழந்தைகள் சுமக்கவேண்டிய பள்ளிப்பாடப்புத்தகங்கள் எவ்வளவு என்றும் வீட்டுப்பாடத்தின் அளவு என்னவாக இருத்தல் வேண்டும் என்றும் வழிகாட்டியுள்ளது.

கட்டண வசூலில் கறாராக இருக்கும் நம்முடையை கல்வி அமைப்புகள், இதுபோன்ற ஆலோசனைகளுக்கு தம்முடைய கேளாச்செவியை மட்டுமே கொடுத்து வருவது ஒன்றும் வியப்பானதல்ல.

வீட்டுப்பாடங்கள் தனித்தாளில் செய்யப்படவேண்டும்.

மாணவர்களுக்கு பள்ளிக்கூடங்களிலேயே தனித்தனி லாக்கர்கள் ஏற்படுத்தப்படவேண்டும்.

வகுப்பறை நோட்டுப்புத்தகங்கள் பள்ளியிலேயே பாதுகாக்கப்படவேண்டும்.

முதல் இரண்டு வகுப்புகளுக்கு வீட்டுப்பாடம் கூடாது.

மூன்று நான்கு வகுப்புகளுக்கு வாரத்திற்கு இரண்டு மணிநேர வீட்டுப்பாடம்.

நான்கு முதல் எட்டு வகுப்புகளுக்கு ஐந்து அல்லது ஆறு மணி நேர வீட்டுப்பாடம் போதுமானது.

ஒன்பது பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு வாரத்திற்கு பத்து முதல் பன்னிரண்டு மணிநேர வீட்டுப்பாடம் போதுமானது.

முதல் இரண்டு வகுப்பு மாணவர்களின் பள்ளிக்கூட பைகள் பள்ளியே தம்முடைய பொறுப்பில் வைத்துக்கொள்ளவேண்டும்.

இவர்கள் மதிய உணவையும் பென்சில் பெட்டியையும் பள்ளிக்கு கொண்டுவந்தால் போதுமானது.

அதெல்லாம் சரி....
வீட்டுப்பாடம் குறைவாக இருந்தால் நம்முடைய பிள்ளைகள் சரியாக படிப்பார்களா?

நியாயமான அச்சம்தான்...

வகுப்பறையில் ஆசிரியரின் கற்பித்தல் முழுமையானதாக இருந்தால் இந்த அளவிற்கான வீட்டுப்பாடம் போதுமானதே.

கற்பித்தல் முழுமையாக இருக்க நாம் என்ன செய்யமுடியும்?

அங்கேதான் விஷயம் இருக்கிறது.

கற்பித்தல் முழுமையாக இருக்க முழுமையான ஈடுபட்டோடு உழைக்கக்கூடிய ஆசிரியர்கள் வேண்டும்.

மனப்பாட கல்விமுறைக்கு டாட்டா சொல்லவேண்டும்.

அரசின் உருப்படியான கண்காணிப்பு வகுப்பறைகளின் மீது இருத்தல் வேண்டும்.

அரைகுறையாக சம்பளம் கொடுக்கும் கல்வி நிறுவனங்கள் வழங்கும் கல்வியும் அரைகுறையாகத்தானே இருக்கும்?