Wednesday, July 7, 2010

லஞ்சாதிபதியே நமஹ!
அங்கிங்கெனாதபடி நீக்கமற நிறைந்திருப்பது யார்?

கடவுளா? லஞ்சமா?

கொஞ்சகாலத்திற்கு முன்பு எங்கும் நிறைந்தவன் பரம்பொருளாக இருந்திருக்கலாம்.

இந்த மனிதர்கள் பகுத்தறிவாளர்களாக மாறிப்போன பிறகு அந்த இடத்தை லஞ்சமும், ஊழலும் பற்றிப்பிடித்துக்கொண்டன.

லஞ்சம் மனிதர்களோடு இரண்டறக்கலக்கவேண்டும் என்பதற்காகவே அரசு சில திட்டங்களை வைத்திருக்கிறது.

மூவலூர் ராமாமிர்தம் திருமண உதவித்திட்டம் என்றொரு திட்டம்.

மணப்பெண்ணுக்கு 20 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டம் இது.

இந்த உதவித்தொகையை பெற்றுத்தரும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றும் சமூக நல விரிவாக்க அலுவலருக்கு இன்றைய மார்க்கெட் நிலவரப்படி லஞ்ச நிர்ணயம் 700 ரூபாய்.

07.07.2010 நாளிட்ட செய்தித்தாளில் இருந்து இன்றைய லஞ்ச மார்க்கெட் நிலவரம் தெரியவந்திருக்கிறது.

டாக்டர் முத்துலெட்சுமிரெட்டி உதவித்திட்டம் என்றொரு திட்டம்.

கர்ப்பிணி பெண்களுக்கு ஆறாயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இந்த உதவித்தொகையை பெற்றுத்தருவதற்காக செவிலியர்கள் லஞ்சம் வாங்கியதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

இன்றைய மார்க்கெட் நிலவரம் தெரியவில்லை.

திருமணத்தின்போதும், கருவாக வளரும்போதும் ஊடாடும் லஞ்சம் வளர்ந்து பள்ளிக்கூடம்போகும்போது நம்மை விட்டுப்போய்விடுமா என்ன?

சாதிச்சான்று, வருமானச்சான்று, இருப்பிடச்சான்று இவற்றையெல்லாம் வழங்கும் கடவுளுக்கு கிராம நிர்வாக அலுவலர் என்று பெயர்.

இந்தக்கடவுளை மேற்பார்வை செய்யும் பெரிய கடவுளர்களுக்கு வருவாய் ஆய்வாளர், தாசில்தார் என்றெல்லாம் அச்சுறுத்தும் பெயர்கள்.

ஒரு ஒன்பதாம் வகுப்பு படிக்கும் விவரமறிந்த மாணவனிடம் சாதிச்சான்று, வருமானச்சான்று, இருப்பிடச்சான்று இவற்றை வாங்குவதற்கு மார்க்கெட்டில் எவ்வளவு லஞ்சம் என்று கேட்டுப்ப்பாருங்கள்.

பளிச்சென்று ஒரு புன்னகையோடு பதில் வரும்.

“ஐம்பது ரூபாய்”

திருமணத்தில் தொடங்கி, கருவோடு வளர்ந்து, பள்ளிப்பருவத்திலே மனதில் பதிந்த லஞ்சம், அரசியல்வாதியான பிறகு விட்டுப்போய்விடுமா என்ன?

தமிழ்நாட்டு அரசியல்வாதியிடம் “லஞ்சம் பெருத்துப்போச்சே” என்று அலறிப்பாருங்கள்.

உடனடியாக பதில் வரும்.

கேரளாவை விட, கர்நாடகத்தைவிட, ஆந்திரத்தை விட தமிழ்நாட்டில் லஞ்சரேட் குறைவுதான் என்று புள்ளிவிவரம் கொடுப்பான் அந்த அரசியல் வித்தகன்.

2 comments:

vignaani said...

நீங்கள் பதிவில் சொல்வது மிகச் சரி.
ஆனால் ஒன்று: பதிவில் சொன்ன கிராம ஊழியர், வருமான அதிகாரி, செவிலியர் முதலியவர் அரசு ஊழியர்களே; ஆனால், முடிக்கும் போது தாங்கள் அரசியல்வாதிகளைப் பற்றி சொல்லி முடிக்கிறீர்கள். திரைப் படங்கள் ஆயினும், ஊடகங்கள் ஆயினும் அரசியல் வாதிகளையே குற்றம் சொல்கின்றனர்; ஊழியர்களை காண்பிப்பதில்லை. நான் சொல்வது இது தான்: அரசியல் வாதிகளை விட லஞ்சக் குற்றவாளிகள் அரசு அதிகாரிகளே; அவர்கள் தம் பணியை கையூட்டு வாங்காமல் செய்தால், அரசு திட்டங்கள் அனைத்தும் சரியான பலனைத் தரும்

மித்ரா அம்மா said...

என் தந்தை தலைமை ஆசிரியராக இருந்த போது சமையல் உதவியாளரின் ஊழலை தடுத்தார் என்பதற்காக மிக மோசமான முறையில் மற்றொரு உதவி தலைமை ஆசிரியர் மூலம் பழிவாங்கப்பட்டார் ....ஊழல் என்பது கோடிகளில் மட்டும் இல்லை,10 முட்டையாக இருப்பினும் கடுமையாக தண்டிக்க பட வேண்டும் ..ஆனால் என்று ? யார் செய்வது?

Post a Comment