Monday, January 31, 2011

ஊர்வன (020)ஊர்வன என்பவை தரையோடு தரையாக ஊர்ந்துசெல்லும் பிராணிகள் ஆகும்.

ஊர்வனவற்றின் சிறப்புக்குணங்கள்:
1. முட்டையிட்டுக்குஞ்சு பொரித்தல்
2. முதுகெலும்புள்ள பிராணிகள்
3. கால்களில் கொக்கிபோன்ற உகிர்களைக்கொண்ட விரல்கள்.

பறவைகளும் கால்களில் கொக்கிபோன்ற உகிர்களைக்கொண்டிருக்கின்றன. எனவே பறவை அல்லாத ஊர்ந்துசெல்லும் உயிர்களை ஊர்வன என்று வகைப்படுத்தலாம்.

எறும்பு, தேள், பூரான், பூச்சிகள், சிலந்தி போன்றவற்றிற்கு முதுகெலும்பு இல்லை. எனவே ஊர்வன என்று இப்பிராணிகளைக்கூற இயலாது.

சிறுவர்கள் வேலிகள், புதர்கள் இவற்றில் காணப்படும் ஓணான்களை எந்தவித காரணமும் இன்றி அடித்துக்கொன்றுவிடுகின்றனர். ஓணான்கள் நமக்கு எந்த தீங்கும் செய்வதில்லை. மாறாக நமக்கு அவை நன்மையே செய்கின்றன.

பாம்பைக்கண்டால் அடித்துக்கொல்லும் மானிடர்கள் உண்டு. பயந்து ஓடும் மானிடர்களும் உண்டு. பாம்புகள் மனிதர்களுக்கு எந்த விதத்திலும் தீங்கிழைப்பதில்லை. பாம்புகடித்து சிலர் இறந்திருக்கலாம். தனக்கு ஆபத்து என்று உணரும்போதுமட்டுமே பாம்புகள் கடிக்கின்றன.

மனிதர்களைத்தேடிவந்து எந்த பாம்பும் கடிப்பதில்லை.

உறங்கி விழித்தவனும் உறக்கமிழந்து விழித்தவனும் (019)
ஒளிவெள்ளத்தால் உறக்கமிழந்த ஒரு மனிதனின் மனநிலை எப்படி இருக்கும்? எலிகளைக்கொண்டு நடத்தப்பட்ட இந்த ஆய்வு படிக்கச்சுவையானது.

ஆய்வின் முதல்படியாக, இயல்பான பகல்-இரவு சுழற்சியில் உறங்கி எழுந்த எலிகளின் மனநிலை பதிவு செய்யப்பட்டது.

இரண்டாவது படியாக, இரவு முழுவதும் ஒளிவெள்ளத்தால் எலிகளின் உறக்கத்திற்கு செயற்கையான இடையூறு ஏற்படுத்தப்பட்டது.

மறுநாள் எலிகளின் நடவடிக்கைகளை ஆராய்ந்தபோது அவை உளச்சோர்விற்கு ஆளாகி இருப்பது தெரியவந்தது. இருபத்திநான்கு மணிநேரமும் ஒளிவெள்ளத்திலேயே இருக்குமாறு செய்யப்பட்ட எலிகளிடம் உளச்சோர்விற்கான அறிகுறிகள் இன்னும் அதிகமாக தென்பட்டன.

ஆய்வின் அடுத்தபடியாக, நிரந்தர ஒளிவெள்ளத்தில் இருக்கவேண்டிய எலிகளுக்கு ஒதுங்கிக்கொள்ள ஏதுவாக ஒரு இருட்டுத்துளையும் கூடுதலாக ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த இருட்டுத்துளைக்குள் ஒதுங்கி ஓய்வெடுக்கும் எலிகளின் உளச்சோர்வு, மற்ற எலிகளைக்காட்டிலும் குறைவாக இருந்தது.

2009 டிசம்பர் 28, நாளிட்ட Behavioural Brain Research இதழில் ஓஹியோ பல்கலைக்கழக மாணவி லாரா ஃபோன்கென் என்பவரின் ஆய்வுமுடிவுகள் வெளியாகி உள்ளன. இந்த ஆய்வு ஒரு தெளிவான முடிவை அறிவிக்கிறது.

இரவு நேரத்தில் ஒளியை அதிகமாக பயன்படுத்துபவர்கள் மறுநாள் அதிகமான உளச்சோர்விற்கு ஆளாகிறார்கள் என்பதுதான் அந்த முடிவு.

இந்த ஆய்விற்கு உட்படுத்தப்பட்ட 24 ஆண் எலிகளும் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டன. முதல் குழுவைச்சேர்ந்த 12 எலிகளும் நாளொன்றிற்கு 16 மணிநேரம் முழுமையான ஒளிவெள்ளத்திலும் 8 மணிநேரம் இருட்டிலும் இருக்குமாறு ஏற்பாடு செய்யப்பட்டது.

இரண்டாவது குழுவைச்சேரந்த 12 எலிகளும் 24 மணிநேரமும் முழுமையான ஒளிவெள்ளத்திலேயே இருக்குமாறு செய்யப்பட்டது. ஒவ்வொரு குழுவிலும் 6 எலிகளுக்கு மாத்திரம் வேண்டும்போது ஒளிவெள்ளத்தில் இருந்து மறைந்துகொள்ளும் வசதி ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டது.

மூன்று வாரங்களுக்குப்பிறகு இந்த 24 எலிகளின் உடலில் சுரக்கும் கார்டிகோஸ்டிரான் என்ஸைமைக்கொண்டு பல தொடர்ச்சியான சோதனைகள் நடத்தப்பட்டன.

இதுவரை நடத்தப்பட்ட ஆய்வுகளில் இருந்து வெளிப்படும் உண்மை இதுதான்: “உளச்சோர்வு, மனக்கலக்கம், மன உளைச்சல் இவையெல்லாம் ஒரே செடியில் பூத்த பூக்களைப்போன்றவை.

கார்ட்டிகோஸ்டிரான் என்னும் என்சைம்தான் இந்த உளவியல் நோய்களுக்கு காரணமானவை. இரவில் அதிகமாக செயற்கை ஒளியை பயன்படுத்துபவர்களின் உடல்நலமும், மனநலமும் நிச்சயமாக பாதிக்கப்படும்.”

மாறிவரும் தற்கால சூழ்நிலையில் இந்த எச்சரிக்கை அலட்சியப்படுத்த இயலாதது. நமது வீடுகளில் நள்ளிரவில் வெகுநேரம் தொலைக்காட்சிப்பெட்டிகள் பயன்படுத்தப்படுகின்றன. இப்போதெல்லாம் ஒரே அறையில் இரண்டு தொலைக்காட்சிப்பெட்டிகளுடன் ஒரே நேரத்தில் இரண்டு திரைப்படங்களை நள்ளிரவுவரை இரசிக்கும் வழக்கம் பரவிவருகிறது.

இந்த ஆய்வுகள் இன்னும் விரிவாக நடைபெற்று வருகின்றன. இரவு-பகல் சுழற்சியில் உறங்கியெழும் உயிரினங்களைக்கொண்டு இந்த ஆய்வுகள் நடத்தப்படும்போது இன்னும் தெளிவான முடிவுகள் வர இருக்கின்றன. உறக்கமிழந்து விழிப்பதைக்காட்டிலும் இப்போதே விழித்துக்கொள்வது நல்லது அல்லவா?

இன்னும்படிக்க: http://www.sciencedaily.com/releases/2009/10/091021101812.htm

உரோமம் நரைப்பது ஏன்? (018)
“நரைத்தமுடி அறிவின் அடையாளம்” என்பதெல்லாம் பொய் என்கிறது ஐரோப்பிய விஞ்ஞானிகள் குழு.

கறுத்தமுடி நரைத்துப்போவது ஏன் என்பதற்கும் இப்போது விடை காணப்பட்டுள்ளது.

நம்முடைய உரோம செல்களில் இயற்கையாகவே சிறிதளவு ஹைட்ரஜன் பெராக்சைடு என்னும் வேதிப்பொருள் சுரக்கிறது.

வயது அதிகரிக்கும்போது இவ்வாறு சுரக்கப்படும் ஹைட்ரஜன் பெராக்சைடின் அளவும் அதிகரிக்கிறது. உரோமத்திற்குள்ளேயே ஏற்படும் இந்த மாற்றங்கள் முடியை சாம்பல் நிறத்திற்கு மாற்றி அதன் பிறகு வெள்ளையாக்கிவிடுகிறது என்கிறார்கள் இந்த ஐரோப்பிய விஞ்ஞானிகள்.

உரோமத்திற்கு இயற்கையாகவே நிறமூட்டுவது மெலனின் என்னும் வேதிப்பொருளாகும். உரோமம், கண்கள், தோல் இவற்றின் நிறத்தை தீர்மானிப்பது இந்த மெலனின் தான். மெலனின் சுரப்பதை ஹைட்ரஜன் பெராக்சைடு தடைசெய்துவிடுவதுதான் பிரச்சினையின் மூலவேர்.

மனிதர்களின் உரோமக்கால்களின் மாதிரிகளை பகுப்பாய்வு செய்து இந்த முடிவுகள் எட்டப்பட்டுள்ளன.

உரோமக்கால்களில் சுரக்கும் ஹைட்ரஜன் பெராக்சைடை தண்ணீராகவும், ஹைட்ரஜன் வாயுவாகவும் சிதைவடையச் செய்யும் பணியை MSR A and B என்னும் என்சைம்கள் செய்கின்றன.

MSR A and B என்சைம்கள் சுரப்பது குறைவடையும்போது ஹைட்ரஜன் பெராக்சைடு சிதைவடைவதும் குறைந்துபோகிறது.

ஹைட்ரஜன் பெராக்சைடு அதிகரிப்பதால் tyrosinase என்னும் என்சைம் உற்பத்தியாவதும் நின்று போய்விடுகிறது.

மயிர்க்கால்களில் மெலனின் சுரப்பதற்கு இந்த tyrosinase எனப்படும் என்சைம்தான் காரணம்.

இன்னும் படிக்க:
http://www.sciencedaily.com/releases/2009/02/090223131123.htm

உயிரி கார்பன் (017)
உயிரி கார்பன் என்பது பாறைவடிவிலான செறிவுமிகுந்த கார்பன் ஆகும்.

சாதாரண கரியில் நீர் மூலக்கூறுகள் காணப்படும். ஆக்சிஜன் இல்லாத சூழலில் சாதாரணகரியை வெப்பப்படுத்தினால் இந்த நீர் மூலக்கூறுகளை அகற்றமுடியும்.

நீர் மூலக்கூறுகள் அற்ற கார்பன் ‘உயிரி கார்பன்’ (bio char) எனப்படுகிறது.

ஆதிவாசிகளான அமேசான் இந்தியர்கள் மண்வளத்தைப்பெருக்குவதற்காக உயிரி கார்பனை பயன்படுத்தியிருக்கிறார்கள்.

இதுபற்றிய கட்டுரை அண்மையில் வெளிவந்த Environmental Science & Technology இதழில் வெளியாகியுள்ளது.

கார்பன் டை ஆக்சைடு ஒரு பசுமை இல்ல வாயு.

புவி வெப்பமடைவதற்கு காரணமான கார்பன் டை ஆக்சைடில் கார்பன் என்னும் கரிமம் அடங்கியுள்ளது.

உயிரி கார்பனை அதிக அளவில் தயாரிப்பதன் மூலம் காற்றில் கலந்துபோகும் கரிமத்தை மண்ணிலேயே நிலைபெறச்செய்யலாம். இதன்மூலம் மண்வளம் பெருகும் என்பது இந்தக்கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கொலம்பியாவின் ஆதிவாசிகளான அமேசான் இந்தியர்கள் வேளாண் கழிவுகளில் இருந்து உயிரி கார்பனை உற்பத்தி செய்திருக்கிறார்கள். மரம், புல், தட்டைகள் இவற்றை காற்றில்லா சூழலில் எரித்து மண்வளத்தை பெருக்கியிருக்கிறார்கள். மக்கும் பொருட்களுடன் இந்த உயிரி கார்பனையும் கலந்து நிலத்திற்கு உரமாக இட்டார்கள் என்னும் செய்தி விஞ்ஞானிகளிடம் ஆர்வத்தை தூண்டியிருக்கிறது. மேலும் கரிமப்பொருளை காற்றில் கலக்கவிடாமல் நிலத்திலேயே உயிரி கார்பன் வடிவில் நிலைபெறச்செய்தார்கள் என்பது நமக்கெல்லாம் வியப்பூட்டும் செய்தி ஆகும்.

காற்றில்லா சூழலில் கரிமப்பொருட்களை எரிக்கும்போது கார்பன் மோனாக்சைடு - ஹைட்ரஜன் வாயுக்கலவை (synthesis gas) வெளியாகும்.

இந்த வாயுவை சேமித்து எரிபொருளாக பயன்படுத்தலாம். இது ஒரு ஆற்றல் குறைந்த எரிபொருள். ஆனால் வற்றாத வளமுடையது.

இன்னும் படிக்க: http://www.sciencedaily.com/releases/2010/01/100113172252.htm

ஆதவன் (036)

வட்டமான ஆதவன்
வானில் வந்து நிற்கிறான்.
தட்டுப்போல மின்னி மின்னித்
தங்கமாகத் தெரிகிறான்.

கண்ணைக்கூசும் ஆதவன்
காண்பாய் என்னை என்கிறான்.
விண்ணில் எங்கும் ஒளி நிறைத்து
வியப்பை நமக்குத் தருகிறான்.

செம்மை ஒளியை ஆதவன்
செடிகள்மீது தெளிக்கிறான்.
நம்மை நோக்கி நகைத்த வண்ணம்
நானிலத்தைப் பார்க்கிறான்.

பார்க்கப் பார்க்க ஆதவன்
பளபளப்பாய் ஆகிறான்.
வளர்ந்துவிட்ட வெள்ளி போல
வடிவம் மாறி வருகிறான்.

- அழகனார் - சிறுவர்மணி - 08.01.2011

அறிவுள்ள காகம் (035)

காகம் நல்ல காகமாம்
கறுப்பு வண்ணக் காகமாம்
காட்டில் வெயிலில் அலைந்த - அதற்கு
கடுமையான தாகமாம்.

நீரைத்தேடி ஊருக்குள்ளே
நீண்ட நேரம் பறந்ததாம்
நீலவண்ணப் பானை கண்டு
நிரம்ப மகிழ்ச்சி கொண்டதாம்.

இரண்டு காலால் பானையை
இறுகப்பற்றி அமர்ந்ததாம்
எட்டி உள்ளே பார்த்தால் நீரோ
எட்டும் தொலைவில் இல்லையாம்.

அறிவு கொண்ட காகமோ
ஆழ்ந்து யோசனை செய்ததாம்
அருமையான திட்டம் கிடைக்க
அகம் மகிழ்ந்து கரைந்ததாம்.

பானை அருகில் கிடந்த கல்லை
பறந்து அலகால் எடுத்ததாம்
குவியல் கற்கள் முழுவதையும்
குடத்தின் உள்ளே போட்டதாம்.

துவளா உறுதி கொண்ட காகம்
தொடர்ந்து முயற்சி செய்ததால்
தண்ணீர் மேலே வந்ததாம்
தாகம் தீரக் குடித்ததாம்.

அழகுக்காகம் அறிவினாலே
தாகம் தணித்த செயலைப்போல்
அணுகும் துயரை நாமும் கூட
அறிவினாலே வெல்லலாம்!

கவிஞர் செ.செயராமன் – சிறுவர்மணி 08.01.2011

Sunday, January 30, 2011

வண்ணச்சிட்டே வா வா (034)கொஞ்சும் வண்ணச்சிட்டே-நீ
கொஞ்சம் வாயேன் கிட்டே
பஞ்சு போன்ற உன்னை-நான்
பார்ப்பேன் மெல்லத் தொட்டே!

மிளகைப்போன்ற கண்கள்-சிறு
முள்ளைப்போலும் அலகு
பளபளக்கும் சிறகு-உன்
பிஞ்சுக்காலும் அழகு!

சின்ன உயிரும் நீயே-என்
சிந்தை கவர்ந்திட்டாயே
கன்னல் மொழிதான் பேசி-என்
கைமேல் அமருவாயே!

என்ன வேணும் சொல்லு-நீ
பறக்கும் வேகம் அம்பு
சின்னப்பாப்பா வாரேன் உன்
சிறகில் ஏற்றிச் செல்லு!

நன்றி: மா.ஆறுமுகக்கண்ணன் - சிறுவர்மணி 29.01.2011

இனப்பெருக்கத்திற்கு இணங்காத பெண்தாவரம் (015)


தாவரங்களின் ஆண்பாகம் என்பது மகரந்தத்தூள்கள்.

பெண்பாகம் என்பது சூல்முடிகள்.

பறவைகள், காற்று இவற்றின் உதவியால் மகரந்தத்தூள்கள் சூல்முடியில் போய் ஒட்டிக்கொள்கின்றன. சூல்தண்டு வழியாக மகரந்தத்தூள் இறங்கி, ஒரே ஒரு மகரந்தம் மட்டும் சூலகத்திற்குள் போய்ச்சேருகிறது. இதைத்தான் தாவரங்களில் கருவுறுதல் என்கிறோம்.

மகரந்தத்தூள்களை ஏற்பதா, மறுப்பதா என்பதை சூல்முடிகள் ஆராய்ந்து முடிவு செய்கின்றனவாம். இந்த முடிவுகள் எப்படி செய்யப்படுகின்றன? புரத மூலக்கூறுகள்தான் இந்தப்பணியை செய்யுகின்றன என்கின்றனர் மிசெளரி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.

மனிதர்களுக்கு கண்களும் காதுகளும் இருப்பதால் இனப்பெருக்கத்திற்கான துணையை தேர்வுசெய்வதிலும் புணர்ச்சி செய்வதிலும் சிக்கல் இருப்பதில்லை. இருந்தாலும் மனிதர்கள் பால்வினை நோய்களை தேடிக்கொள்ளத்தவறுவதில்லை.

தாவரங்களுக்கு கண்கள் இல்லை. காதுகளோ, மூக்கோ இல்லை.

என்றாலும் மரபியல் பண்புகளை பாதிக்கும் இனப்பெருக்கத்திற்கு தாவரங்கள் இடம்கொடுப்பதில்லை.

மனிதர்களைப்போல் இனப்பெருக்கத்திற்கான மகரந்தச்சேர்க்கை தாவரங்களில் அவ்வளவு எளிதாக நடைபெற்றுவிடுவதில்லை.

மகரந்தம் தான் யார் என்பதை மூலக்கூறுகள் வழியாக சூல்முடிக்கு தெரிவித்தல் வேண்டும். சூல்முடி இந்த அடையாளத்தை புரிந்துகொண்டபிறகு மகரந்தச் சேர்க்கையை ஏற்கலாம் அல்லது மறுக்கலாம்.

மகரந்தங்கள் சூல்முடியை அடைந்ததும் அங்கே ஆண்-பெண் அறிமுகம் நடைபெறுகிறது. வார்த்தைகளுக்கு பதிலாக புரத மூலக்கூறுகளே இந்தப் பணியை செய்கின்றன.

இவ்வாறு தாவரங்களின் இனப்பெருக்க நடைமுறையில் கருத்தரித்தலுக்கு கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது.

இதனால் தாவரங்களின் மரபுப்பண்புகள் காப்பாற்றப்படுகின்றன.

ஆராய்ச்சியாளர்கள் NaTTS மற்றும் 120K ஆகிய இரண்டு சூல்முடி புரதங்களை ஆய்விற்கு பயன்படுத்தினார்கள். இந்த இரண்டு சூல்முடி புரதங்களும் சூலகத்திற்கு மகரந்தத்தை எளிதில் கொண்டுசெல்லும் இயல்புடையவை.

மறுபுறம் S-RNase-binding protein (SBP1), the protein NaPCCP ஆகிய மூன்று புரதங்களும் ஒரு என்ஸைமும் சூல்முடியுடன் இணைத்து வைக்கப்பட்டன. எந்தெந்த மகரந்த புரதங்கள் எந்த சூல்முடி புரதங்களுடன் இணைந்தன என்பது கண்டறியப்பட்டதில் மேற்கண்ட முடிவுகள் தெரியவந்துள்ளன.


இன்னும் படிக்க:
http://www.sciencedaily.com/releases/2008/10/081023113107.htm

இரத்தத்தை தூய்மையாக்க ஒரு கருவி (013)

தொற்றுநோய் ஆராய்ச்சியாளர்கள் ஒரு புதிய கருவியை கண்டுபிடித்துள்ளனர். டயாலிசிஸ் கருவியைப்போன்றது அது. மெல்லிய இழைகளின் துணைகொண்டு இரத்தத்தில் உள்ள வைரஸ்களை இந்த கருவி வடிகட்டிவிடுகிறது. இரத்தக்குழாயில் இருந்து குழாய்வழியாக இரத்தம் இந்தக்கருவிக்குள் செல்கிறது. சுத்தம் செய்யப்பட்ட இரத்தம் மீண்டும் உடலுக்குள் செலுத்தப்படுகிறது.

எண்ணற்ற நோய்கள் இந்தக்கருவியினால் குணப்படுத்தப்படுகின்றன.

நாளொன்றுக்கு 14,000 பேர் எச்.ஐ.வி. வைரஸ்களால் பாதிக்கப்படுகிறார்கள்.

இந்தக்கருவியினால் எய்ட்ஸ் நோயாளிகளின் இரத்தம் சுத்திகரிக்கப்பட்டு, நீடித்த ஆயுளுக்கு வழிபிறந்துள்ளது.

சாண்டிகோவின் யேத்லான் மருத்துவமனை தலைவர் ஜிம் ஜோய்ஸ் கூறும்போது இந்த கருவி ஒரு டயாலிசிஸ் கருவியைப்போல் செயல்படுவதாக கூறினார்.

உடலில் உள்ள அனைத்து இரத்தமும் இந்தக்கருவியில் உள்ள பெட்டகத்தின் வழியாக எட்டு நிமிடத்திற்கொருமுறை செலுத்தப்படுகிறது. இரத்தத்தில் உள்ள அனைத்து வைரஸ்களும் சிலமணி நேரங்களுக்குள் நீக்கப்படுகின்றன. எச் ஐ வி, ஹெபடிடிஸ்-சி, தட்டம்மை, ஃப்ளூ ஆகிய வைரஸ்கள் எளிதில் நீக்கப்பட்டுவிடுகின்றன.

பெரிய அளவிலான இந்தக்கருவியை மருத்துவமனையிலும், சிறிய அளவிலான கருவியை அவசரகால ஊர்திகளிலும் பயன்படுத்த முடியுமாம். தீவிரவாதிகளினால் ஏவப்படும் வைரஸ்களில் இருந்து உயிர்காக்கவும் கூட இந்தக் கருவி பயன்படுகிறது.

சிறுநீரகம் செயலிழந்தவர்களுக்கு டயாலிசிஸ் செய்யப்படுகிறது. உடலில் உள்ள இரத்தம் அனைத்தும் செயற்கை சிறுநீரகம் வழியாக செலுத்தப்பட்டு சுத்தம் செய்யப்படுகிறது.

டயாலிசிஸ் என்பது உயிரை தக்கவைப்பதற்கான சிகிச்சை மட்டும்தான். நோயில் இருந்து விடுதலை அளிப்பதற்கான சிகிச்சையல்ல டயாலிசிஸ். வலிநிறைந்ததும் செலவு பிடிப்பதுமான டயாலிசிஸ் சிகிச்சை இப்போது நிறைய பேருக்குத் தேவைப்படுகிறது.

இரத்தம் சுத்தப்படுத்தும் கருவியும் டயாலிசிஸ் கருவியைப்போன்றது தான்.

பணம் இருப்பவர்களை பயமுறுத்திக்கொண்டிருந்தது வைரஸ். இனிமேல் பணக்காரர்களுக்கு வைரஸ்களிடமிருந்து விடுதலை.

வாழ்க அறிவியல்!
வளர்க அவரது கண்டுபிடிப்புகள்!


இன்னும் படிக்க:
http://www.sciencedaily.com/videos/2008/0602-cleaning_infected_blood.htmஇந்தப்பாலம் உறுதியாக இருக்கிறதா? (012)


ஒரு புதிய கண்டுபிடிப்பு எப்போது நிகழ்த்தப்படுகிறது தெரியுமா?

இது என்ன கேள்வி? அவசியம் ஏற்படும்போது மட்டுமே புதுப்புது கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்பட்டுள்ளன என்பது வரலாறு.

கடந்த ஆகஸ்டு மாதம் மின்னபோலிஸ் நகரில் ஒரு பாலம் இடிந்து 13 பேர் உயிரிழந்தனர். பாலத்தின் உறுதித்தன்மையை விரைவாக கண்டறிய வேண்டிய அவசியம் பொறியாளர்களுக்கு ஏற்பட்டது. மிச்சிகன் பல்கலைக்கழக பொறியாளர் ஜெரோம் லின்ச் என்பவர் பாலத்தின் மீது ஒரு வண்ணப்பூச்சை தெளித்து அதன்மூலம் பாலத்தின் உறுதித்தன்மையை அறிந்துகொள்ளும் வழியைக் கண்டுபிடித்தார்.

இந்த முறையின் மூலம் பாலத்தின் எந்தப்பகுதியையும் உடைத்தெடுக்க வேண்டிய அவசியமில்லை. இலட்சக்கணக்கான வாகனங்கள் கடந்துசெல்லும் பாலங்கள் எவ்வளவு உறுதியாக இருக்கின்றன என்பதை உடனுக்குடன் அறிந்துகொள்ள இந்த கண்டுபிடிப்பு மிகவும் உதவியாக இருக்குமில்லையா?

அரிமானத்தின் காரணமாக பாலங்கள் வயதாகி வலிமை இழந்துபோவது இயற்கையான நிகழ்வு.
பொறியாளர்கள் என்னதான் கண்களில் விளக்கெண்ணெயை விட்டுக்கொண்டு சோதனை செய்துபார்த்தாலும் பாலத்தில் ஏற்பட்டுள்ள மிகச்சிறிய சேதாரங்கள் மனிதக்கண்களை ஏமாற்றிவிடுகின்றன.

பாலத்தின் மேற்புறம் ஒரு படலமாக இந்த சிறப்புக்கலவை தெளிக்கப்படுகிறது.

படலத்தின் அடியில் நுண்ணிய கார்பன் நானோ குழாய்கள் பரப்பப்பட்டிருக்குமாம்.

கார்பன் மின்கடத்தும் பொருள். மின்னோட்டம் செலுத்தப்படும்போது, பாலத்தில் ஏற்பட்டுள்ள சேதங்களை ஒரு கம்ப்யூட்டர் காட்சித்திரையில் விரியச்செய்யுமாம்.

பாலத்தில் ஏற்பட்டிருக்கும் விரிசல் மேற்பரப்பிலும் காணப்படும் என்பதும், பாலத்தில் உள்ளே ஏற்பட்டிருக்கும் அரிமானம் மேற்பரப்பிலும் உண்டாகியிருக்கும் என்பதுதான் இந்த ஆய்வு முறையின் தத்துவம்.

பாலத்தின் உறுதித்தன்மையை உடனுக்குடன் தெரிந்துகொண்டால், விசாரணையை விரைவாக முடிக்கலாம்; பாலம் கட்டுவதில் ஊழல் செய்தவர்களை விரைவுநீதிமன்றம் மூலம் தண்டித்து விரைவாக சிறைக்கனுப்பி விடலாம் என்ற நம்ம ஊர் குரல் கேட்கிறதா?

இசை பயின்றால் அறிவுத்திறன் பெருகும் (011)

மூளையின் இடது வலது பாகங்களை ஒருசேர பயன்படுத்தும் ஆற்றல் சாதாரண மனிதர்களைவிட வாத்தியக்கலைஞர்களுக்கு அதிகமாக இருப்பதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

சாதாரண மனிதர்களைவிட நன்கு பயிற்சிபெற்ற வாத்தியக்கலைஞர்கள் வித்தியாசமாக சிந்திக்கிறார்களாம். திறமையான கலைஞர்கள் தமது சிந்தனைகளை பலமுனைகளிலும் ஒருசேர செலுத்துவதிலும் வல்லவர்களாக இருக்கிறார்களாம். வாத்தியக்கலைஞர்கள் தொழில் ரீதியாக படைப்புத்திறனைக்கொண்டிருப்பதால் இது சாத்தியமாகிறது.

வாத்தியக்கலைஞர்கள் இசையை வெளிப்படுத்தும்போது வெவ்வேறு வரிவடிவங்களை ஒரே சமயத்தில் இரண்டு கைகளையும் பயன்படுத்தி வெளிப்படுத்துவதை நாம் கவனித்திருக்கிறோம்.

இசைக்குறியீடுகளை படிப்பது என்பது இடதுபக்க பெருமூளையின் வேலை. இசைக்கலைஞர் தன்னுடைய கற்பனைத்திறனை அத்துடன் இணைத்து வாசிப்பது என்பது வலதுபக்க பெருமூளையின் வேலை.

வாண்டர்பில்ட் பல்கலைக்கழகத்தின் உளவியல் நிபுணர்கள், இந்த ஆய்வை செய்வதற்கு, எட்டு ஆண்டுகளுக்குக் குறைவில்லாமல் பயிற்சி பெற்ற இருபது மாணவர்களையும், இசைப்பயிற்சி பெறாத இருபது மாணவர்களையும் தேர்ந்தெடுத்துக்கொண்டனர். பியானோ, காற்றுக்கருவிகள், கம்பிக்கருவிகள், தோல் கருவிகள் ஆகிய வாத்தியங்களில் பயிற்சி பெற்ற மாணவர்களும், அனைத்து வயதுப்பிரிவினர், இருபாலர், வெவ்வேறு கல்வித்தகுதியுடைய மாணவர்களும் இந்த ஆய்விற்கு உட்படுத்தப்பட்டனர்.

இரண்டு நிலைகளில் ஆய்வுகள் நடத்தப்பட்டன. முதல் ஆய்வில் பலவகையான வீட்டு உபயோக பொருட்கள் மாணவர்களுக்கு காண்பிக்கப்பட்டன. எழுதப்பட்ட ஒரு சொல்லும் அவர்களுக்கு கொடுக்கப்பட்டது. சொல்லுக்கும் பொருளுக்குமான தொடர்பைக் கூறுவதில் கலைஞர்கள் மற்றவர்களை விட சிறந்து விளங்கினர். அதுமட்டுமில்லாமல் வீட்டு உபயோக பொருட்களுக்கு புதுப்புது உபயோகங்களையும் இசைக்கலைஞர்கள் கூறினர்.

இரண்டாவது ஆய்வில் பொருட்களின் உபயோகம் ஒரு வார்த்தையால் தொடர்பு படுத்தப்படும்போது பெருமூளையின் முன்பகுதி ஸ்கேன் செய்யப்பட்டது. மூளையின் கார்டெக்ஸ் பகுதியில் ஆக்ஸிஜனேற்றத்தின் அளவு அதிகமாக இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதுமட்டுமல்லாமல், இசைக்கலைஞர்களின் அறிவுத்திறன் (IQ) அளவீடு செய்யப்பட்டபோது, மற்றவர்களைக்காட்டிலும் அதிகமாக இருப்பதும் கண்டறியப்பட்டது.

இன்னும் படிக்க: http://www.sciencedaily.com/releases/2008/10/081002172542.htmஇறந்தவர் உடலை பாதுகாக்க...(014)வாழ்வின் நிறைவு மரணம் எனப்படுகிறது.
மரணம் ஏற்பட்டவுடன் இதயத்துடிப்பு நின்று, மூச்சடைத்து, மூளை செயலிழந்து விடுகிறது. இதுவே உடல் ரீதியான மரணம் எனப்படுகிறது.

மூன்று அல்லது நான்கு மணிநேரம் கழிந்தபின்னர்தான் மூலக்கூறு ரீதியான மரணம் ஏற்படுகிறது.


இறந்தவரின் உடலை அடக்கம் செய்யவோ தகனம் செய்யவோ பலசந்தர்ப்பங்களில் காலம் தாழ்ந்துவிடுகிறது.
இதுபோன்ற சமயங்களில் மனித உடலின் மாண்பை பாதுகாக்க Mortuary Box என்னும் குளிர்சாதனப்பெட்டி பயன்படுகிறது.
இறந்தவரின் உடலை வீட்டிலேயே 2 டிகிரி செல்சியஸ் முதல் 5 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பநிலையில் வீட்டிலேயே வைத்து பாதுகாக்க முடியும். இதற்கு Mobile Mortuary Box என்னும் சாதனம் பயன்படுகிறது.

இறந்தவர் உடலை பலநாட்கள் பாதுகாக்கவேண்டியிருந்தால் மருத்துவமனையில் உள்ள Fixed Mortuary Box ல் வைத்து பாதுகாக்கலாம். 0 டிகிரி செல்சியஸ் முதல் 8 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பநிலை இந்த பெட்டிகளில் பராமரிக்கப்படும்.

இறந்தவரின் உடலை விமானம் அல்லது கப்பல் மூலமாக எடுத்துச்செல்லவேண்டுமானால் tinfoil பயன்படுத்தி 'சீல்' செய்துதான் அனுப்ப முடியும். இந்த நடை முறைக்கு embalming என்று பெயர்.

Embalming வசதிகள் பெரிய மருத்துவமனைகளிலும், பெருநகரங்களிலும் கிடைக்கின்றன.

நன்றி: கலைக்கதிர்


இனப்பெருக்கத்திற்கு இரட்டைத்தாழ்ப்பாள் (016)


விலங்குகளில் நிகழ்த்தப்பட்ட ஆய்வின்படி மன உளைச்சலுக்குக்காரணமானது glucocorticoids என்னும் ஹார்மோன். இது அட்ரீனல் சுரப்பியினால் சுரக்கப்படுகிறது.

இந்த Glucocoriticoids விரைவாக செயல்பட்டு மூளையில் சுரக்கும் இனப்பெருக்க ஹார்மோன் GnRH ஐ தடை செய்கிறது. GnRH என்பது ஒரு செக்ஸ் ஹார்மோன். Glucocorticoids செக்ஸ் ஹார்மோன் சுரப்பதை தடைசெய்வது மட்டுமல்லாமல், இனப்பெருக்கத்திற்கு முட்டுக்கட்டை போடும் GnIH என்னும் ஹார்மோனை மேலும் மேலும் சுரக்கச்செய்து இனப்பெருக்கத்திற்கு இரட்டைத்தாழ்ப்பாள் போடுகிறது.2000 ஆம் ஆண்டில்தான் இனப்பெருக்கத்திற்கு முட்டுக்கட்டை போடும் இந்த புதிய GnIH ஹார்மோன் கண்டுபிடிக்கப்பட்டது. இது GnRH ன் செயல்பாட்டிற்கு எதிராக செயல்பட்டு இனப்பெருக்கத்தை மேலும் மேலும் தடைசெய்யக்கூடியது. இதுவரை பறவையினங்களில் மட்டுமே இருப்பதாக அறியப்பட்ட இந்த GnIH ஹார்மோன் தற்போது மனிதன் போன்ற பாலூட்டிகளிலும் இருப்பது அறியப்பட்டுள்ளது.

கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச்சேர்ந்த அறிஞர்கள் இந்த புதிய கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளனர். GnRH ன் தூண்டுதலால் பிட்யூட்டரியில் சுரக்கும் gonadotropins, luteinizing hormone, follicle ஆகியவை சுரப்பது குறைந்துபோகிறது. இதனால் ஆணின் விதைப்பைகளில் சுரக்கப்படும் testosterone, பெண்ணின் ஓவரிகளில் சுரக்கப்படும் estradiol ஆகியவற்றின் அளவு குறைகிறது. விளைவாக,. விந்தணுக்களின் எண்ணிக்கை குறைகிறது. அண்டம் வெளியிடுதல் பாதிப்படைகிறது. இனப்பெருக்க ஈடுபாடும் குறைந்துபோகிறது.

கருத்தரிப்பதற்கான சிகிச்சைக்கு உள்ளாகும் ஒருவருக்குக்கூட ‘தாம் இந்த சிகிச்சை செய்துகொள்ளவேண்டியுள்ளதே’ என்கிற மன உளைச்சல் இருக்குமல்லவா? அடைத்துவைத்து வளர்க்கப்படும் மிருகங்களுக்குக்கூட மன உளைச்சல் ஏற்பட்டு அவற்றின் இனப்பெருக்கம் குறையும் வாய்ப்பு உள்ளது.

மன உளைச்சல் ஏற்படும் சமயங்களில் இனப்பெருக்கச்செயல்களில் ஈடுபடுவது பயனற்றது என்று இந்த ஆய்வாளர்களில் ஒருவர் கருத்து தெரிவிக்கிறார். இது ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்து அல்ல. ஏனெனில் ‘வறுமையினால் ஏற்படும் மன உளைச்சலுக்கு மருந்தாகத்தான் இனப்பெருக்கச்செயல்களில் இந்தியர்கள் ஈடுபட்டு மக்கள்தொகையை அதிகரிக்கிறார்கள்’ என்பது மக்கள்தொகைப்பெருக்கத்தை ஆராயும் வல்லுநர்கள் கருத்து ஆகும்.

இன்னும் படிக்க: http://www.sciencedaily.com/releases/2009/06/090615171618.htm

Saturday, January 29, 2011

ஆணா...பெண்ணா...இந்த ஆசை முகம் (010)


நாம் ஒருவரைப்பார்த்தவுடன் அவர் ஆணா பெண்ணா என்பதை எப்படி பிரித்தறிகிறோம்? நமது மூளையில் இந்த வேறுபாடுகள் எவ்வாறு உணர்த்தப்படுகின்றன? இது ஒரு சுவையான ஆய்வு. மாண்ட்ரீல் பல்கலைக்கழக உளவியல் அறிஞர் இது பற்றிய ஓர் ஆய்வுக்கட்டுரையை வெளியிட்டுள்ளார்.

படத்தில் காணும் androgynous தோற்றம் கொண்ட நபரின் நிறம், முகத்தில் உள்ள சில குறிப்பிட்ட பாகங்கள் இவற்றைக்கொண்டுதான் மனித மூளை ஆண்பெண் வேறுபாடுகளை விரைவாக பிரித்தறிகிறது.

புருவங்கள் வாய்ப்பகுதி இவற்றில் காணப்படும் பளபளப்பினாலும் நமது மூளை ஆணையும் பெண்ணையும் தெரிந்துகொள்கிறது.

குமரப்பருவத்தில் மூக்கு, தாவாய், வாய், தாடை, கண்கள் ஆகிய உறுப்புகளில் பெரும் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இந்த மாற்றங்களை நமது மூளை வெகுவிரைவாக உள்வாங்கிக்கொள்கிறது.

30 நபர்களிடம் 300 Caucasian முகங்களின் புகைப்படங்களைக்கொடுத்து ஆய்வுகள் நடத்தப்பட்டன. இந்த ஆய்வுகளில் இருந்து கண்கள், வாய் இவற்றைச்சுற்றிலும் காணப்படும் பளபளப்பு பாலினத்தை பிரித்தறிவதில் மூளைக்கு உதவிசெய்கின்றது. இதுவரை கண் இமைகளுக்கும் புருவத்திற்கும் இடையே உள்ள இடைவெளியைக்கொண்டு பாலினத்தை மூளை வேறுபடுத்தி அறிவதாக நம்பப்பட்டுவந்தது. ஆனால் தற்போதைய ஆய்வுகளின்படி வாய், கண்கள் இவற்றை சுற்றியுள்ள சிவப்பு, பச்சை நிறங்களைக்கொண்டு பாலினம் பிரித்தறியப்படுகிறது. சிவப்பு மற்றும் பச்சை நிறங்களின் சேர்க்கையினால் கருமைநிறம் தோன்றும் என்பது நமக்குத்தெரியும்.

ஆண்பெண் கூறுகளை உள்ளடக்கிய androgynous முகத்தின் நிறம் சிகப்பாக இருந்தால் ஆண் என்றும் பசுமையாக இருந்தால் பெண் என்றும் நம்முடைய மூளை பிரித்தறிகிறது.

ஆனால் வாய்ப்பகுதியை பார்க்கும்போது இதற்கு நேர்மாறாக உணரப்படுகிறது.

சாதாரணமாக பெண்களின் வாய் சிவப்பு நிறத்தில் இருப்பது ஒரு காரணம்.

ஓர் ஆணின் கண்புருவத்தைச்சுற்றியுள்ள பகுதி இருளாக இருக்கும்.

தோல் தடிமனாக இருப்பதே இந்த இருள் நிறத்திற்கு காரணம்.

இதே போன்று மேலுதடும் தாவாயும் உரோமங்கள் வளரும் பகுதி என்பதால் கருமையாக இருக்கும்.இன்னும் படிக்க:
http://www.sciencedaily.com/releases/2009/05/090527121049.htm


ஆட்டிஸம் (009)

“ஆட்டிஸம்” என்பது மூளையின் முக்கியச் செயல்பாடுகளாகிய பேச்சுத்திறன், சமுதாயத்தொடர்பு மற்றும் புலன் உணர்வு இவற்றைப் பாதிக்கும் நோயாகும்.

ஆட்டிஸம் நோயை தமிழில் “மதி இறுக்கம்” என்று அழைக்கிறார்கள்.

ஆட்டிஸம் நோய் பாதித்த ஒவ்வொரு குழந்தையும் மற்றவரிடமிருந்து வேறுபடுகிறார்கள்.

மதி இறுக்க நோய் பாதித்த குழந்தைகளை இனம் காண சில அறிகுறிகள் உள்ளன.

யார் முகத்தையும் பார்க்காது இருத்தல்; காது கேளாததுபோல் இருத்தல்; நன்றாக பேசிக்கொண்டிருந்த குழந்தையின் பேச்சுத்திறன் படிப்படியாக குறைதல்; யார்மீதும் நாட்டம் கொள்ளாமல் இருத்தல்; காரணமின்றி மற்றவர்களைத் தாக்குதல்; தன்னைத்தானே சிறைப்படுத்திக் கொள்ளுதல்; அர்த்தமற்ற செயல்களைச் செய்தல்-எடுத்துக்காட்டாக கையை உதறுதல், உடலை முன்னும் பின்னும் அசைத்தல்; அதிக வலியை தாங்கிக் கொள்ளுதல்; தன்னைத்தானே காயப்படுத்திக் கொள்ளுதல் ஆகிய அறிகுறிகளால் மற்ற குழந்தைகளிடமிருந்து இவர்களை எளிதாக வேறுபடுத்தி அறியலாம்.

மதி இறுக்க நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பேசுபவர்களின் கண்களைவிட உதட்டு அசைவை கருத்தூன்றி பார்ப்பதாக இப்போது பொது உளவியல் அறிஞர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.

படத்தில் பச்சை நிறம் ஆட்டிஸம் பாதிப்புக்கு உள்ளான ஓர் இரண்டு வயதுக் குழந்தையின் கண்கள் எதிரே இருப்பவரின் வாயசைவிலேயே நிலைத்து நிற்பதைக் காட்டுகிறது.

மஞ்சள் நிறம் இயல்பான குழந்தையின் கண்கள் எதிரே உள்ளவரின் உடலின் பல பாகங்களிலும் படர்ந்து இருப்பதைக் காட்டுகிறது.

பிறந்த ஆரோக்கியமான குழந்தை சில வாரங்களில் மற்றவர்களின் கண்களைப்பார்க்கத்துவங்கும்.

சமூக உறவுகளுக்கு கண்கள்தானே சாளரம். “உள்ளத்தின் கதவுகள் கண்களடா..” என்பதுதானே கவிஞரின் வாக்கு.

எவ்வளவுநேரம் சிசுக்கள் மற்றவர்களின் கண்களைப் பார்க்கின்றன என்பதை வைத்து அவர்கள் சமூகத்துடன் தொடர்புகொள்ளும் திறனை அளந்துவிடலாம்.

மற்றவர்களின் கண்களைப் பார்க்க மறுக்கும் சிசு மதி இறுக்க நோயால் பாதிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம்.

யேல் பல்கலைக்கழக மனநல மருத்துவர்கள் மழலைகளைத் தாக்கும் மதி இறுக்கநோயைக் குறித்து ஆராய்ந்து வருகிறார்கள்.

இரண்டு வயது நிரம்பிய மழலைகள் தாயின் பராமரிக்கு உட்படும் சமயங்களில் மழலையர்களின் பார்வை நிலைக்கும் இடங்கள் சிறப்புக்கருவிகளின் துணைகொண்டு பதிவு செய்யப்பட்டன.

சில வாரங்கள் கழித்து மழலையர்களின் பார்வை நிலைப்பு பராமரிப்பவர்களின் கண்களின் மீது நிலைக்குத்தி இருந்தது தெரியவந்தது.

இது மழலையர்கள் சமூகத்துடன் ஒன்றிப்போவதற்கான அடையாளமாகும்.

தாயின் கண்களின் மீது அல்லாமல் உதட்டு அசைவுகளின்மீது மழலையர்களின் பார்வை நிலைகுத்தி இருக்குமானால் அது மதி இறுக்க நோயின் தொடக்கமாக இருக்கலாம்.

இது பற்றிய ஆய்வுகள் தற்போது யேல் பல்கலைக்கழகத்தில் நடந்து வருகிறது.


இன்னும் படிக்க:
http://www.sciencedaily.com /releases/2008/09/080926143751.htm

இரண்டு குதிரைகளின் கதை

ஒரு பரந்த மேய்ச்சல் நிலத்தில் இரண்டு குதிரைகள் மேய்ந்து கொண்டிருந்தன.

அவற்றில் ஒன்று குருட்டுக்குதிரை.

குதிரைகளின் சொந்தக்காரன் மிகவும் நல்லவன்.

அவனுக்கு குருட்டுக்குதிரையை கொல்ல மனமில்லை. அதனால் அவனுக்குச்சொந்தமான மேய்ச்சல் நிலத்தில் அந்த குருட்டுக்குதிரையை மேய விட்டிருந்தான்.

குருட்டுக்குதிரைக்கு துணையாக ஒரு நல்ல குதிரையையும் விட்டு வைத்தான். நல்லகுதிரையின் கழுத்தில் ஒரு வெண்கல மணியையும் கட்டிவிட்டிருந்தான் அவன்.

கழுத்தில் மணியுடன் இருந்த குதிரை ஒரு அறிவுள்ள குதிரை.

அது மேயும்போது, குருட்டுக்குதிரை மேயும் இடத்தையும் சரி பார்த்துக்கொள்ளும்.

குருட்டுக்குதிரை வழிதவறி வெகுதூரம் போய்விட்டால் தன்னுடைய கழுத்து மணியை வேகமாக அசைத்து ஒலியெழுப்பும்.

குருட்டுக்குதிரையும் தன்னுடைய தவறை உணர்ந்து மணியோசை வந்த திசைநோக்கி நகர்ந்து மேயத்தொடங்கும்.

குருட்டுக்குதிரைக்கு ஆதரவாக நல்ல குதிரையின் மணியோசை இருந்தது.


குதிரைகளின் சொந்தக்காரனைப்போன்றவர்தான் நம்மைப்படைத்த இறைவனும்.

நாம் சில நேரங்களில் குருட்டுக்குதிரைகளாக இருக்கிறோம்.

அறியாமை, கல்லாமை, இல்லாமை, போன்ற துன்பங்களால் சிரமப்படுகிறோம்.

அதுபோன்ற சமயங்களில் நல்ல குதிரையின் கழுத்து மணியோசைபோன்று சில நல்ல உள்ளங்கள் நமக்கு உதவி செய்கின்றன.

வேறு சில சமயங்களில் நாமே கழுத்து மணியோசையாக மாறி இல்லாதவர்களுக்கு உதவி செய்கிறோம்.

நம்மைப்படைத்த இறைவன் இரண்டு வகை மக்களையும் பார்த்துக்கொண்டிருக்கிறான்.

மாம்பழமாம் மாம்பழம் (033)

மாம்பழமாம் மாம்பழம்

மணி மாமா கூடையிலே
மாம்பழமாம் மாம்பழம்
சந்தையிலே விற்றிடவே
முந்தி முந்திப் போனாராம்

ஓடியோடிக் களைத்த மாமா
ஓரிடத்தில் அமர்ந்தாராம்-பசி
ஓயாமலே இருந்ததாலே
ஓர் பழத்தைக் கடித்தாராம்

கனிகளிலே இனித்தகனி
மாங்கனியே என்றாராம்-உடன்
கனிந்தகனி ஒன்றெடுத்து
களிப்புடனே தின்றாராம்

யாருமில்லா நடுவழியில்
காரமில்லா விருந்தடா-இதை
நானுண்ணாமல் வேறொருவர்
உண்ணுவதா சொல்லடா

இப்படியே சொன்னபடி
எல்லாக்கனியும் தீர்த்தாராம்
அப்படியே சந்தை மறந்து
காட்டுவழியைப் பார்த்தாராம்

நன்றி: சிறுவர்மணி

மழையே மழையே வா வா! (032)

மழையே மழையே வா வா!


மழையே மழையே வா வா
மழலையர் மகிழ்ந்திட வா வா
வானத்து அமிழ்தமே வா வா

ஏங்கி அழைத்தோம் வா வா
ஏற்றம் தந்திட வா வா
செடிகொடி சிரித்திட வா வா
சீக்கிரம் சீக்கிரம் வா வா

துளிகள் தெறித்திட வா வா
தெள்ளிய நீராய் வா வா
ஏரிகள் நிரம்பிட வா வா
ஏமாற்றாமல் வா வா

வெப்பம் தணித்திட வா வா
விளைச்சல் பெருகிட வா வா
குடிநீர் அளித்திட வா வா
குதூகலம் நிறைந்திட வா வா!

-இரா.சாந்தகுமார்

சிறுவர்மணி-12.06.2010

மழையே மழையே போ போ போ (031)

மழையே மழையே போ போ போ

மழையே மழையே போ போ போ
மற்றொரு நாள் நீ வா வா வா
அழையா விருந்தாய் நீ வந்தாய்
ஆறு குளங்களில் நீர் தந்தாய்

உடைந்தது பாலம் ஊரெங்கும்
ஊர்கள் மிதக்குது ஆறெங்கும்
அடைந்தது வீதிகள் சேறெங்கும்
அணைவெள்ளம் சூழ்ந்தது சீரங்கம்

உச்சிப்பிள்ளையார் தப்பிவிட்டார்
உயரே இருப்பதால் அவர் பிழைத்தார்
குச்சும் குடிசையும் மாடிகளும்
குபு குபு என்றே மிதக்கிறதே

பள்ளிகள் விடுமுறை மழையென்று
பதுங்கினோம் வீட்டிலே மழையென்று
துள்ளியாம் ஆடலே மழையென்று
சோறுயாம் சமைக்கலே மழையென்று

விருந்தும் மருந்தும் மூன்றே நாள்
விடாமழை இடிபுயல் எத்தனை நாள்
இருந்தும் தொடர்ந்தும் நீ பெய்ய
இன்னொரு நாள் நீ வா மழையே

நன்றி: சிறுவர்மணி

பூக்கள் (030)

பூக்கள்

பூக்களென்றால் புன்னகை
இயற்கையழகின் வல்லமை
நிறமிருக்கும் ஆயிரம்
கணந்தோறும் தீவிரம்!

வாழ்க்கைக்கான நாட்டம்
நன்மை கொண்ட கூட்டம்
பிள்ளையுள்ளக் களிப்பு
புவியணிந்த ஜொலிப்பு!

ஈகை எங்கள் இயல்புதான்
இருக்கும் வரை இன்பந்தான்
பூக்களென்றால் பெருமையே
புத்திளமை எளிமையே!

வெயிலுங் காற்றும் நண்பர்கள்
ரசிப்பவரே தொண்டர்கள்
எதிரியென்று எவரிங்கே
குறைந்தகால வாழ்விலே!

பூவைப்போன்ற அற்புதம்
நீயுமென்று தெரியுமா?
மனத்தினிலே பூ மலர்ந்தால்
உலகம் ஒரு தோட்டம்தான்!

-கவித்தம்பி

சிறுவர்மணி 03.07.2010

பாப்பா பாப்பா கதை கேளு (0029)

பாப்பா பாப்பா கதை கேளு

பாப்பா பாப்பா கதை கேளு
பாரத நாட்டின் கதை கேளு
கதையைக் கேட்டதும் நீ ஆடு
கன்னித்தமிழில் புகழ் பாடு

காந்தி பிறந்தது நம்நாடு
கலைகள் வளர்த்தது நம்நாடு
நேரு ஆண்டது நம்நாடு
நினைத்தே வாழ்வில் நடைபோடு

சுதந்திரம் கண்டது நம்நாடு
சொர்க்கம் தவழுது நம்நாடு
இந்தியர் என்றொரு தாய்மடியில்
இயங்கும் நாட்டின் புகழ் பாடு

உழைப்பு என்பது நம் மூச்சு
உயர்வு ஒன்றே நம் பேச்சு
கற்றவர் நிறைந்த நாடென்று
கைகளைப் பிணைந்தே நீ ஆடு

பாப்பா பாப்பா கதை கேளு
பாரத நாட்டின் கதை கேளு
கதையைக் கேட்டதும் நீ ஆடு
கன்னித்தமிழில் புகழ் பாடு

நன்றி: தினமணி-சிறுவர்மணி

பள்ளிக்கூடம் (028)

பள்ளிக்கூடம்

பள்ளிக்கூடம் விட்டனர்
பாலர் ஓடி வந்தனர்
வீட்டுக்குள்ளே நுழைந்தனர்
வீசி பையை எறிந்தனர்

கையைக் காலை கழுவினர்
உடையை மாற்றிக் கொண்டனர்
வீட்டை விட்டு ஓடினர்
வீதியில் ஒன்றாய்க் கூடினர்

கபடி ஆட்டம் ஆடினர்
காக்காய் ஓட்டம் ஓடினர்
கிரிக்கெட் கூட ஆடினர்
கோலி கில்லி அடித்தனர்

பந்துவீசி பிடித்தனர்
பம்பரம் கூட சுற்றினர்
பட்டம் விட்டு சிரித்தனர்
பாண்டி ஆட்டம் ஆடினர்

ஆட்டம் எல்லாம் முடிஞ்சாச்சு
அவரவர் வீட்டுக்கு போயாச்சு
பாங்காய் பையை எடுத்தாச்சு
பாடம் படிக்க அமர்ந்தாச்சு!

நன்றி: சிறுவர்மணி

பழுத்த ஓலையும் பச்சை ஓலையும் (027)

பழுத்த ஓலையும் பச்சை ஓலையும்

பழுத்த ஓலை மண்ணில் வீழப்
பச்சை ஓலை சிரித்ததாம்
பழைய ஓலை வீழும் அழகைப்
பார்த்துப் பார்த்து ரசித்ததாம்

கழுத்து முறிய விழுந்த ஓலை
அடுப்பில் எரிந்து போனதாம்
காலம் என்னும் காலன் கணக்கில்
பச்சை பழுக்கலானதாம்

தானும் கறுத்துப் போனபோது
தனது நிலைமை உணர்ந்ததாம்
தனக்கும் உண்டு மரணம் என்ற
தலை எழுத்து புரிந்ததாம்

தென்னையிடம் தனது உடலை
சேர்த்தணைக்கச் சொன்னதாம்
என் முடிவும் மண்ணிடமே
என்று பதில் வந்ததாம்

தான் சிரித்த சிரிப்பதனைத்
தானும் கேட்டு அழுததாம்
தனக்கு அழ யாரும் இன்றி
தரையில் வீழ்ந்து மாண்டதாம்

நன்றி: சிறுவர்மணி

நீலவானம் (026)

நீலவானம்

உருவத்தில் பெரியது யானை
உடைக்க எளியது பானை
உரியில் தாவிடும் பூனை
வேடன் அடிப்பது மானை

வானத்தில் தெரிவது மின்னல்
வாயில் அரைப்பது தின்னல்
பெண்கள் தொடுப்பது பின்னல்
பலகணி என்பது சன்னல்

சுமையாய் இருப்பது இரும்பு
கடித்தால் இனிப்பது கரும்பு
பூத்துச் சிரிப்பது அரும்பு
புற்றில் வாழ்வது எறும்பு

காதுக்கு இனியது கானம்
காப்பது நம்மை தானம்
நீர்மோர் என்பது பானம்
நீலமாய்த் தெரியுது வானம்!

நன்றி: சிறுவர்மணி

நான் யார்? (025)

நான் யார்?

ஊரில் புகுந்து போகிறேன்
உன்னில் கலந்து வாழ்கிறேன்
ஆற்றைக் கடலைத் தழுவினேன்
அகப்படாமல் நழுவினேன்

வேரை உலுக்கி சாய்க்கிறேன்
வெப்பம் போக்கி தணிக்கிறேன்
மாறி மாறி வீசுவேன்
மலரில் அமர்ந்து பேசுவேன்

வேறு யாரும் என்னைப்போல்
வேகத்தோடு செல்லுவார்?
விருப்பத்தோடு உலகெல்லாம்
சுற்றிப்பார்த்து திரும்புவார்

மாறும் மனித உலகினை
மயக்கும் சக்தி கொண்ட என்
பேரு என்ன தெரியுமா?
காற்று என்றால் புரியுமா?

நன்றி: சிறுவர்மணி

தூய வழியில் செல்வோம் (024)

தூய வழியில் செல்வோம்

படிக்கும் பள்ளி ஆலயமாம்
பாதுகாப்போம் நாமதனை
விடியும் முன்பே துயிலெழுந்து
வீட்டுப் பாடம் செய்திடுவோம்

பற்கள் துலக்கிப் பளிச்சென்று
பாதுகாப்போம் முறையாக
மேனி குளித்துப் புதுப்பூவாய்
மிளிர நடப்போம் பள்ளிக்கு

கற்றுக் கொடுக்கும் பாடங்களை
கவனமாகக் கற்றிடுவோம்
வெற்றுக் கதைகள் பேசாது
வெல்வோம் எந்தச் செயலிலுமே

வீணாய் குப்பை போடுவதோ
வெற்றுச் சண்டைகள் போடுவதோ
கனவிலும் செய்யமாட்டோமே
கண்ணியம் காப்போம் யாவருமே

நாளைய நாட்டை உருவாக்கும்
நல்ல சிற்பிகள் நாமென்று
தோளை நிமிர்த்துச் சூளுரைப்போம்
தூய வழியில் நாம் நடப்போம்

வளர்கவி
சிறுவர் மணி
9.1.2010

தவளையார் (023)

தவளையார்

தட தடவென தவளையார்
தாவித் தாவி வருகிறார்
தண்ணிக்குள்ளே விழுகிறார்
தரையை நோக்கி எழுகிறார்

கொட கொடவென மழையுமே
கொட்டி குளமும் நிறைந்ததே
சல சலவென அலையிலே
குதித்து குதித்து மிதக்கிறார்

கட முடவென ராகத்தை
கர கரவென பாடுறார்
கடுங் குளிரில் மகிழ்ச்சியாய்
கண் விழித்து ஆடுறார்

வெட வெடவென நடுங்கினும்
வெக்கை சுட்ட போதிலும்
தட தடவென தவளையார்
தாவித் தாவி வருகிறார்!

நன்றி: சிறுவர்மணி

தண்ணீர்! தண்ணீர்! (022)

தண்ணீர்! தண்ணீர்!


விண்ணின் சாரம் மழையாகும்
மண்ணில் சேர்த்தால் நலமாகும்
நெகிழ்மப் பொருட்களைப் போட்டு நீ
இறங்கும் மழையைத் தடுக்காதே-இனி
நிலத்தடி நீரைக்குறைக்காதே!

உழவுத் தொழிலைச் செய்வதுமே
உயிரைக் காத்துக் கொள்வதுமே
குடித்துக் குளித்து மகிழ்வதுமே
தண்ணீர் இன்றி ஆகுமோ-இனி
வறட்சி இங்கே வேண்டாமே!

ஏரி குளத்தை மேடாக்கி
நிறையக் குப்பையை அதில் கொட்டி
தங்கும் மழை நீர் தடுக்காதே
இயற்கையின் சிறப்பைக் கெடுக்காதே!

மழையே நின்று போனாலே
காடும் கழனியும் கருகிடுமே
நாடும் பாலை ஆகிடுமே
நீரும் கனவாய் மாறிடுமே!

தண்ணீர் தண்ணீர் என்றே நீ
தரையைத் தோண்டி அலையாதே
விண்ணின் மழையை நேசிப்பாய்
விழுந்த மழையை சேமிப்பாய்
மண்ணில் வாழ்க்கை மலர்ந்திடுமே
எல்லா நலனும் விளைந்திடுமே!

-சி.அருள் ஜோசப் ராஜ்

சிறுவர்மணி 10.07.2010

செல்லப்பூனை (021)

செல்லப்பூனை

சின்னச்சின்ன பூனையே
செல்லக்குட்டி பூனையே
அறையை விட்டு வராதே
அடுத்தவர் கண்ணில் படாதே

அந்தக் குவளையில் பாலுண்டு
இந்தக் கிண்ணத்தில் சோறுண்டு
வேண்டும்போது எடுத்துண்பாய்
வெளியே மட்டும் வராதே

கட்டில் அடியே இடமுண்டு
புரண்டு படுக்கத் துணியுண்டு
உருட்டி ஆட பந்துண்டு
ஓடியாட இடமுண்டு

பள்ளிக்குப்போகணும் தெரிகிறதா
மாலையில் வருவேன் புரிகிறதா
சொன்னது எதையும் மறக்காதே
தொல்லையில் சிக்கித்தவிக்காதே!

நன்றி: சிறுவர்மணி

சிற்றெறும்பு (020)

சிற்றெறும்பு

சின்னச் சின்னச் சிற்றெறும்பு
சீரகம் போன்ற புற்றெறும்பு
வண்ண வண்ணக் கட்டெறும்பு
வாயின் கூர்மை வெட்டிரும்பு!

ஒன்றன் பின்னே ஒன்றாக
ஒழுங்காய் ஊர்ந்து சென்றிடுமே
ஒன்றையொன்று முந்திடினும்
ஒற்றுமையாகச் சென்றிடுமே!

ஊர்ந்திடும் எறும்பைக் கண்டோமே
உறங்கிடும் எறும்பைக் கண்டோமா?
சேர்ந்திடும் எல்லாம் ஒன்றாகச்
சேர்க்கும் பொருளை நன்றாக!

எறும்பூரக் கல்தேயும்
என்றோர் பழமொழியும் உண்டாமே!
சிறுகச் சிறுகத் தளராமல்
செய்தொழிலாலே பயனுண்டாம்!

சுறுசுறுப்பில் எறும்பைப்போல்
சிறக்க வேண்டும் பிள்ளைகளே!
விறுவிறுப்பைப் படிப்பினிலே
வளர்க்கவேண்டும் சிறுவர்களே!

- நு.ர.ஆறுமுகம்-- சிறுவர் மணி 15.05.10

கோடை (019)

கோடை

கோடைக் காலம் வந்தது
கொடிய வெப்பம் தந்தது
ஆடை களைந்த போதிலும்
ஆளை நனைக்கும் வியர்வையே!

ஓடை போல கானலும்
ஓடும் நீரைப் போலவே
தாரை உருக்கிப் போகுதே
தரையில் நடக்க இயலுமோ!

மேடை போட்ட பசுமையாய்
மெலிந்து வளர்ந்த புல்வெளி
மேலை வெப்பம் தீய்த்ததே
மேலும் வறட்சி காய்த்ததே!

கூடை நிறைய பூக்களும்
குளிர்ந்து மகிழும் மழையதும்
கூடிவந்து சேருமோ
கோடை கொடுமை மாறுமோ?

-வெ.தமிழழகன், சிறுவர்மணி 10.04.2010

குழந்தைப்பூ (018)

குழந்தைப்பூ

பூவைப் போன்றது குழந்தைதான்
பூவும் குழந்தையும் ஒன்றேதான்
குழந்தை என்றால் குழந்தைதான்
குழந்தை போலொன்று இல்லைதான்

கள்ளம் இல்லா உள்ளம்தான்
கடவுள் வாழும் இல்லம்தான்
பிள்ளை மனமும் வெள்ளைதான்
பேசும் தெய்வம் பிள்ளைதான்

அசையும் குழந்தை மழலைதான்
அமுதம் ஊறும் குழலேதான்
இதனில் சிறந்தது யாழேதான்
என்பார் செவிகள் பாழேதான்

நடக்கும் குழந்தை அன்னம்தான்
நடந்தால் மகிழ்வாள் அன்னைதான்
சிரிக்கும் குழந்தை கன்னம்தான்
சின்னத் தங்கக் கிண்ணம்தான்!

நன்றி: தினமணி-சிறுவர்மணி


கொட்டம் அடிக்குது வானம் (017)


கொட்டம் அடிக்குது வானம்


கொட்டம் அடிக்குது வானம்
கொட்டுது மழை எங்கும்
பட்டென மின்னல் தெரிக்கும்
பார்க்கக் கண்கள் கூசும்

சட்டென இடியும் இடிக்கும்
சப்தம் காதை பிளக்கும்
எட்டிக் காற்று வீசும்
எங்கும் ஈரம் பரவும்

குட்டைக் குளங்கள் நிறையும்
குடிக்கத் தண்ணீர் கிடைக்கும்
தோட்டமும் வயலும் செழிக்கும்
தோன்றும் மகிழ்ச்சி எங்கும்

கொட்டும் மழையால் பூமி
குளிர்ந்து நன்மை பயக்கும்
வாட்டும் வெம்மை நீங்கும்
வளமை எங்கும் சேரும்

நன்றி: தினமணி-சிறுவர்மணி

Friday, January 28, 2011

குழந்தை (016)

குழந்தை

சின்ன முல்லை மொட்டு
சிறகு முளையாச் சிட்டு
கன்னம் தங்கத் தட்டு
கரிய புருவம் கட்டு

மின்னல் கண்ணின் வெட்டு
மேனி காஞ்சிப் பட்டு
பின்னும் காலின் எட்டு
பேச்சு தேனின் சொட்டு

துன்ப இருளைத் தொட்டு
துடைத்து எறிந்து விட்டு
இன்பம் விளையும் மட்டு
இசைக்கும் மழலை மெட்டு

அன்னை மனத்தைப் பித்து
ஆக்கப்பிறந்த முத்து
நன்னம்பிக்கை வித்து
நாட்டின் உயர்ந்த சொத்து

நன்றி: சிறுவர்மணி

குயிலம்மா......(015)

குயிலம்மா......

கருப்புக் குயிலு கண்ணம்மா
கானம் ஒண்ணு பாடம்மா
கனியும் சோறும் தாரேம்மா
கவிதை ஒண்ணு சொல்லம்மா

காட்டுக்குள்ளே மறைஞ்சி நின்னு
கண்ணாமூச்சி காட்டாம
கண்ணுக்கு முன்னே வந்திடம்மா-என்
கருப்புக் குயிலு கண்ணம்மா

கட்டெறும்பு வருதும்மா-உன்
காலைக் கடிக்கப் பார்க்குதம்மா
கத்தி நானும் கூவுறேம்மா
காற்றாய் நீயும் பறந்திடம்மா

ஆர்.ஜெயசீலன்
சிறுவர் மணி
9.1.2010

குரங்கு (014)

குரங்கு

குன்று காடு ஊர்ப்புறத்தில்
குரங்குக்கூட்டம் வாழும்
கோயில்களில் தோப்புகளில்
கும்பலாகச் சூழும்!

ஒன்றையொன்று துரத்திக்கொண்டு
ஓடி மரத்திலேறும்
ஓட்டுவதற்கு எவர் சென்றாலும்
‘உர் உர்’ என்றே சீறும்!

குட்டியினை மார்பிலணைத்துக்
கொண்டே எங்கும் திரியும்
கொம்பு விட்டுக் கொம்புதாவி
குதித்தே விந்தை புரியும்!

பட்டுத்தலை மயிர் விலக்கிப்
பார்த்துப் பேனை பொறுக்கும்
பரபரப்பாய் சொறிந்தபடி
இங்குமங்கும் திரியும்!

கொம்பிலேறி நின்றபடி
குதித்து அதனை உலுக்கும்
கோபம் வந்தால் கத்தி கடித்துக்
குதறி சண்டை வலுக்கும்!

கம்பெடுத்தால் குரங்காட்டியின்
கட்டளைபோல் நடக்கும்
காண்பவர்க்கு வியப்பு தந்து
குறும்புசெய்து குதிக்கும்!

நன்றி: திட்டக்குடி முத்து முருகன்-சிறுவர் மணி 24.07.2010

காய்கறி (013)

காய்கறி

வெண்டைக்காய் குழம்புக்காய்
விரும்பி வாங்கும் முருங்கைக்காய்
சுண்டைக்காய் சாம்பார்க்காய்
சிரிக்குது பாரு கத்தரிக்காய்

கொம்புக்காய் பாகற்காய்
குடலை சுத்தம் செய்யும் காய்
பிஞ்சுக்காய் புடலங்காய்
பிடியேன் ஒன்று கூட்டுக்காய்

பட்டைக்காய் பொரியலுக்காய்
பந்தலில் காய்த்த அவரைக்காய்
குட்டிக்காய் பூசனிக்காய்
கொழுகொழு மோரு குழம்புக்காய்

நாயமான விலையிலே
நானே தருவேன் நல்ல காய்
தயங்காதே வாங்கிக்கோ
தருணம் விட்டால் இல்லை காய்

நன்றி: தினமணி-சிறுவர் மணி

காலம் உயிரினும் மேலே......(012)

காலம் உயிரினும் மேலே......


மேற்கில் மறைந்த கதிரவனும்
மீண்டும் விடிந்து உதித்திடுவான்
நேற்று சென்ற நேரந்தான்
தெய்வம் நினைந்தும் திரும்பாதே

இழந்த பொன்னை ஈட்டிடலாம்
தொலைத்த பொருளை மீட்டிடலாம்
பொழுதை இழந்தால் இழந்ததுதான்
பொன்னினும் பொழுது சிறந்ததுதான்

உடம்பே நோயில் இளைத்தாலும்
உணவில் ஓய்வில் தேற்றிடலாம்
கடத்திக் காலம் வீணடித்தால்
கருகி வீழ்ந்து சருகாவோம்

திரிந்த பாலும் தேறாது
பிரிந்த உயிரும் சேராது
மறைந்த நேரம் மீளாது
மனதிற் கொள்வாய் மறவாது

இருக்கும் வேலைகள் பலகோடி
எது எது முக்கியம் எனத்தேடி
சுருக்காய் முடித்தால் வாழ்வுனக்கு
சுகமும் மகிழ்வும் தரும் உனக்கு

எடுக்கும் பணிகள் எதுவெனினும்
இன்றே முடிக்கப் பழகிவிடும்
கெடுத்து நேரம் வீணடிப்பார்
கிட்ட வராமல் தடுத்துவிடும்

நன்றி: தினமணி-சிறுவர்மணி

காடு (011)

காடு

கார்த்திகை தீபமெனக்
காடெல்லாம் பூத்திருக்கும்
பார்த்திட வேண்டுமடி-கிளியே
பார்வை குளிருமடி!

காடு பொருள் கொடுக்கும்
காய்கனி ஈன்றெடுக்கும்
கூடிக்களித்திடவே-கிளியே
குளிர்ந்த நிழல் கொடுக்கும்!

குரங்கு குடியிருக்கும்
கொம்பில் கனிபறிக்கும்
மரங்கள் வெயில் மறைக்கும்-கிளியே
வழியில் தடையிருக்கும்!

மாவும் பழுத்திருக்கும்
மலர்கள் விழித்திருக்கும்
பூவின் மதுசுரக்கும்-கிளியே
போவார் அடி வழுக்கும்!

பச்சை மயில் நடிக்கும்
பன்றி கிழங்கெடுக்கும்
நச்சரவங் கலங்கும்-கிளியே
நரியெல்லாம் ஊளையிடும்!

கல்லுரல் போன்ற முகம்
காட்டிடும் பன்றிகளை
மெல்லிய மான் தடுக்கும்-கிளியே
வேங்கைகள் வால் நிமிர்க்கும்!

சிங்கம் புலி கரடி
சிறுத்தை விலங்கினங்கள்
எங்கும் திரியுமடி-கிளியே
இயற்கை விடுதியிலே!

உவமைக்கவிஞர் சுரதா

நன்றி: சிறுவர் மணி 09.10.2010

கன்னுக்குட்டி (010)


கன்னுக்குட்டி

எங்கவீட்டுக் கன்னுக்குட்டி
எல்லோருக்கும் செல்லக்குட்டி
பங்கமில்லா தங்கக்கட்டி
பாசமுள்ள வெல்லக்கட்டி

அம்மா என்றே கத்திடும்
அன்பு கொண்டே நக்கிடும்
சும்மா சும்மா குதித்திடும்
இங்குமங்கும் தாவிடும்

சுட்டித்தம்பி நீவிட
சுகமாய்க்கழுத்தை நீட்டிடும்
கட்டிப்போட அம்மாவும்
கயிறை எடுத்தா ஓடிடும்

தெளிவாய்க் கன்றை பார்த்திடு
தேனாய்ப் பேசி பழகிடு
விழிப்பாய் என்றும் இருந்திடு
ஆடிப்பாடி மகிழ்ந்திடு!

நன்றி: தினமணி-சிறுவர்மணிஓடாக்குதிரை (009)

ஓடாக்குதிரை


ஓடும் குதிரை பல உண்டு
ஓடாக் குதிரை ஒன்றுண்டு
ஆடும் வாலும் அதிலிருக்கும்
அழகிய வண்ணம் பல இருக்கும்

போடும் புல்லைத் தின்னாது
பொழுதும் தண்ணீர் குடிக்காது
பாரம் எதுவும் இழுக்காது
பாய்ந்து போகவும் இயலாது

ஆடும் கலையை அறிந்திருக்கும்
அனைவர் மனமும் கவர்ந்திழுக்கும்
மாறும் மனமும் அதற்கில்லை
மனிதரை சுமக்கத் தெம்பில்லை

பாடும் ஜதிகளுக்கேற்றபடி
பாய்ந்து ஆடிடும் குதிரையடி
ஆடும் வாலுடன் குதிரையடி
அதன் பேர் ஓடாக்குதிரையடி

நன்றி: தினமணி-சிறுவர்மணி

ஐம்புலன் அறிவோம் (008)

ஐம்புலன் அறிவோம்


உண்டு பேசும் வாய்தானே
உள்ளத்துள்ளதை வெளிப்பேசும்
கண்டு களிக்கும் கண்கள்தான்
கருணை கோபம் காட்டிவிடும்!

மணமே அறிய மூக்குதவும்
மண்ணில் வாழ மூச்சாகும்
கணமே காற்று இல்லையெனில்
காணும் உயிர்கள் அழிவாகும்!

ஒலியை உணரும் காதுகளோ
உள்ளம் உணர்த்தும் தூதுவராம்
வலிவும் நலமும் அளிக்கின்ற
வார்த்தைகள் மட்டும் கேட்போமே!

தொட்டு உணர தோலுதவும்
தோலே நமக்கு அழகூட்டும்
விட்டால் அழுக்கு தினம் சேரும்
விரும்பிக்குளித்தால் நலம் பயக்கும்!

காலை மாலை நடந்துவிடு
காற்று வாங்க உலவிவிடு
நாளை என்பதை மறந்துவிடு
நடப்பதை இன்றே தொடங்கிவிடு!

பத்து விரல்கள் சொத்தாகும்
பலனைக்கொடுக்கும் முத்தாகும்
வித்தாய் கைகள் நமக்கிருக்கு
விரைந்தே உழைப்பீர் தோழர்களே!

நன்றி: வ.நஞ்சுண்டன்-தினமணி சிறுவர்மணி-29.05.2010

ஆடி-ஓடி-விளையாடு (007)

ஆடி-ஓடி-விளையாடு

ஆடி ஓடி விளையாடு
அந்திப்பொழுதில் விளையாடு
கூடிப்பழகி விளையாடு
கொஞ்சிக்களித்து விளையாடு

பாட்டும் கதையும் கேட்டுக்கொள்
பயன்படும் உன்றன் அறிவுக்கு
ஆட்டம் ஓட்டம் பழகிக்கொள்
அவசியம் அஃதுன் வளர்ச்ச்சிக்கு

சும்மா இருத்தல் ஆகாது
சோம்பித்திரிதலும் கூடாது
தம்பி உன்னுடல் அழகோடு
தழைத்திடவேண்டும் விளையாடு

கைகள் வீசிப்பந்தாடு
கால்கள் தாவிப்பாய்ந்தோடு
மெய்யை வளைத்து மேல்கீழாய்
மெல்ல மெல்ல பயிற்சியெடு

நீளம் உயரம் நீ தாண்டு
நீரில் பாய்ந்து நீச்சலிடு
தாளம் பொருந்திக் கும்மியடி
தாழ்ந்து நிமிர்ந்து கும்மியடி

தொடு தொடு ஓடித் தொட்டுப்பிடி
தூக்கப் பேயைத் துரத்தியடி
சடுகுடு சடுகுடு மூச்சுப்பிடி
சமர்த்தாய் இருந்தால் வெற்றிப்படி!


நன்றி: தேவ. சுந்தரவடிவேல்-தினமணி-சிறுவர்மணி

அழகுப்பிள்ளை அணில் (006)

அழகுப்பிள்ளை அணில்

அழகுப்பிள்ளை பாருங்க
அணில்பிள்ளை தானுங்க
நாணல் பூவாய் வாலுங்க
கோணல் கிளை தாவுங்க

குண்டுமணி கண்ணால
துருதுருக்கும் தன்னால
யாரும்போனால் முன்னால
பாய்ந்து ஏறும் மரம்மேல

அதுவும் சட்டை போட்டது
முதுகில் பட்டை காட்டுது
சின்னக்காலால் பரபரக்கும்
முன்னங்காலால் இரை கொறிக்கும்

கீச்சு கீச்சு குரல்கொடுக்கும்
மரத்துமேல கூடுகட்டும்
வந்தால் அதனை விரட்டாதீர்
சொந்தம் நமக்கு விலக்காதீர்!


நன்றி: பி.செழியரசு, சிறுவர் மணி 09.10.2010

காட்டுப்பாக்கம் தாத்தா (005)

காட்டுப்பாக்கம் தாத்தா

காட்டுப்பாக்கம் தாத்தாவுக்குக்
காடுபோல தாடியாம்
காடுபோல தாடியாம்
மாடிமேலே நிற்கும்போது
தாடி தரையில் புரளுமாம்!

ஆந்தை இரண்டு, கோழி, மைனா
அண்டங்காக்கை, குருவிகள்
பாந்தமாகத் தாடிக்குள்ளே
பதுங்கிக்கொண்டிருந்தன!

உச்சிமீது நின்ற தாத்தா
உடல் குலுங்கத் தும்மினார்.
அச்சு அச்சு என்றபோது
அவை அனைத்தும் பறந்தன!


நன்றி-தம்பி சீனிவாசன், சிறுவர்மணி02.10.2010

Thursday, January 27, 2011

ஆக்டோபஸ் ஜோசியம் (007)


(இந்த பதிவேற்றம் செய்யும்போது ஸ்பெயினின் வெற்றியும், ஆக்டோபஸின் நினைவுச்சின்னமும் வரலாற்றில் இடம்பெற்றுவிட்டன)

நடக்கப்போவதை ‘உள்ளது உள்ளபடியே’ சொல்லுவது ஆபத்தானது என்பதை இங்கிலாந்தில் பிறந்து ஜெர்மனியில் வாழும் ஒரு ஆக்டோபஸ் நிரூபித்துக்கொண்டிருக்கிறது. மேற்கு ஜெர்மனியில் ஒரு மீன்காட்சியகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் இந்த எட்டுக்கால் தசையுடலிக்கு பெயர் ‘பால்’.
ஆக்டோபஸ் எப்படி ஜோசியம் சொல்லும்?
போட்டியில் விளையாடும் இரண்டு நாட்டு கொடிகளும், உணவாக கொஞ்சம் கருஞ்சிப்பிகளும் வைக்கப்பட்டன. எட்டுக்கால் ‘பால்’ நேராக ஸ்பெயின் கொடி இருந்த பெட்டிக்குச்சென்று சிப்பிகளை விழுங்கிக்கொண்டான். இதுவரை ஜெர்மனி விளையாடிய ஆறு போட்டிகளின் முடிவுகளையும் இந்த எட்டுக்கால் பால் இதே மாதிரி சரியாக கணித்திருக்கிறான்.
குதிரை கீழே தள்ளியது மட்டுமல்லாமல், குழிபறித்த கதையாக மேலும் சில ஜோசியங்களையும் இந்த ‘பால்’ சொல்லியிருக்கிறான்.
• ஞாயிற்றுக்கிழமை நடக்கப்போகும் உலகக்கோப்பை இறுதி கால்பந்து போட்டியில் வெற்றிவாகை சூடப்போவது ஸ்பெயின்தானாம்.
• உருகுவேயுடன் மோதப்போகும் ஜெர்மனி வெற்றிபெற்று மூன்றாவது இடத்தைத்தான் பிடிக்குமாம்.
உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் வெற்றிபெறப்போவது ஸ்பெயின் தான் என்று அறிவித்து ‘உண்ட வீட்டிற்கு இரண்டகம் நினைத்த’ ‘பால்’ இப்போது ஜெர்மானியர்களின் கோபத்திற்கு ஆளாகி இருக்கிறான். பால் இப்படி ‘சேம்சைடு கோல்’ போடுவான் என்று ஜெர்மானியர்கள் எதிர்பார்க்கவில்லை. அவன் ஜோசியம் கூறும் அழகை (!) நேரடியாக தேசீய ஜெர்மன் தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருந்த ஜெர்மானியர்கள் அடுத்தவேளை சாப்பாட்டிற்காக அவனை தங்களுடைய சமையலறைக்கு அனுப்பச்சொல்லியிருக்கிறார்கள். ஆக்டோபஸின் கபட ஜோசியத்தை நேரடியாக பார்த்துக்கொண்டிருந்த மூன்று லட்சத்து ஐம்பதாயிரம் ஜெர்மானியர்களும் ஆக்டோபஸ் எதிர்ப்பு பாடலை பாடிக்கொண்டிருந்தனர். ஆக்டோபஸின் அம்மாவை சந்தேகப்பட்டவர்களும் அந்தக்கூட்டத்தில் இருந்தனர். ‘பால்’ பெயருக்கு பல இ-மெயில் மிரட்டல்களும் வந்துகொண்டிருக்கின்றனவாம். ஸ்பெயின் பிரதமர் இந்த ஆக்டோபஸின் உயிருக்கு பாதுகாப்பு அளிக்க முன்வந்துள்ளார். இந்த ஆக்டோபஸை பாதுகாப்பாக ஸ்பெயினுக்கு கொண்டுவரவேண்டும் என்று ஸ்பெயின்நாட்டு தொழில்துறை மந்திரி கூறியிருக்கிறார். சாதாரணமாக ஆக்டோபஸ்கள் மூன்றாண்டுக்காலம் வாழக்கூடியவை. ‘பால்’ இப்போது இரண்டரை வயதுக்காரன். அடுத்த உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் ஜோசியம் சொல்ல அவன் இருக்கப்போவதில்லை.

இடைக்கால ஏற்பாடாக நம்முடைய ஊர்க்காரர்கள் நினைத்தால் அவனை தமிழ்நாட்டிற்கு கொண்டுவந்து ஆற்றில் தண்ணீர் வருமா? விவசாயம் செழிக்குமா? விலைவாசி குறையுமா? கல்வியும் மருத்துவமும் முன்புபோல் இலவசமாகுமா? அரசியல்வாதிகள் திருந்துவார்களா? என்பது போன்ற இருபதாண்டு வினாக்களுக்கு விடை காணலாம்.

இன்னும் படிக்க:
http://news.discovery.com/animals/psychic-octopus-world-cup.html#mkcpgn=rssnws1

...ஆகவே மீன் சாப்பிடுங்க! (008)விட்டமின் ஈ உடலில் குறைந்தால் எலும்பு சம்பந்தமான நோய்கள் ஏற்படலாம் என்பது பள்ளிக்கூட நூலகளில் காணப்படும் செய்தி. அது தவிர காலில் உணர்ச்சி குறைந்து நடக்க இயலாத நிலையும் ஏற்படும் என்பது புதிய செய்தி.

பெரிஃபெரல் ஆர்ட்டரி டிசீஸ் (Peripheral Artery Disease PAD) என்பது மருத்துவர்களுக்கு ஏற்கனவே அறிமுகமான நோய். கால்களில் ஓடும் ரத்த நாளங்களின் தடிமன் குறைந்து, அதில் கொழுப்பு உள்படிந்து, தொடர்ந்து கால்வலியும், நடக்கவே இயலாத நிலையும் ஏற்படும். இது மிகவும் சாதாரண நோய். உலகில் எண்பது மில்லியன் பேர்களுக்காவது இந்த நோய் இருக்கலாம்.

புற ரத்தநாள நோய்க்கான காரணம் விட்டமின் ஈ குறைபாடு என்பது ஒரு சர்வேயில் இருந்து வெளிப்பட்டது. 4839 அமெரிக்கர்களின் விட்டமின் ஈ அளவு கண்காணிக்கப்பட்டது. கூடவே அவர்களது இரத்த கொலஸ்ட்ரல் இரத்த அழுத்தம் முழங்கால் -மூட்டு இந்டெக்ஸ் (Ankle-Brachial Index) போன்ற புற இரத்தநாள நோய் தொடர்பான குறிகளும் அளவிடப்பட்டன. உடலில் விட்டமின் ஈ அதிகமுள்ளவர்களிடம் மிகக் குறைவாகவே புற இரத்தநாள நோய் இருப்பது தெரிந்தது.

எப்படி விட்டமின் ஈ இரத்த அழுத்தத்தை சீராக வைக்கிறது என்பதை டாக்டர் மைக்கேல் (Michael Milemad, Dept. of medicine and epidemiology & Population health science. Albert Einstin college of Medicine) ஆராய்ந்தபோது இரத்த நாளங்களின் மேல் பரப்பிலேயே விட்டமின் ஈ சென்று உட்காரக்கூடிய புரதங்கள் இருப்பதைக் கண்ணுற்றார்.
இதன்மூம் விட்டமின் ஈ ஹார்மோன்களின் துணையில்லாமல் நேரடியாகவே இரத்த நாளங்களை விரித்து நிறுத்திக்காப்பாற்றும் என்பது தெரிய வருகிறது. எனவே மீன் சாப்பிடுங்கள்.

நன்றி: கலைக்கதிர்.
ஜூலை 2008


சூரிய நடுக்கம் (006)
பூமியின் மேலோட்டுக்குக் கீழே உருகிய குழம்புநிலையில் உள்ள நிலம் எந்நேரமும் புயலாக சுழன்று கொண்டிருப்பதால் அதன் தாக்கம் மேலே நில நடுக்கமாக வெளிப்படுகிறது.

கிட்டத்தட்ட இதே போல சூரியனின் உள்ளும் நிகழ்கிறது.

இதன் பாதிப்பு சூரிய மேல் பரப்பில் சீற்றத்துடன் பாய்ந்து வீசும் பிழம்பு (Solar Flares) களாக வெளிப்படுகிறது.

பூமியின் நிலநடுக்கம் போலவே சூரியனின் மேல்புறத்திலும் அதிர்வுகள் ஏற்படுகின்றன. " 5 நிமிட அதிர்வு " என்று அழைக்கப்படும் ( 5 minute oscillation) அதிர்வில் 3 மில்லி ஹெர்ட்ஸ் அதிர்வு ஏற்படும்.

இது கோயில் கண்டாமணி அடித்து ஓய்ந்தும் தொடர்ந்து கேட்கும் ரீங்காரம் போன்றிருக்கும்.
சோலார் அண்ட் ஹீலியோஸ்பியர் (Solar and Helioshpere Observatory SOHO) ஆப்சர்வேட்டரி என்ற NASA-ESA ஆய்வுக்கூடம் இந்த அதிர்வுகளைக் கவனித்துக்கொண்டு வருகிறது.

அதிர்வுகள் சூரியனில் எப்படி வெளிப்படுகிறது என்பதை அறிவதால் அதன் செயல்பாடுகளை அறிய முடியும் என்பது உள்ளக்கிடக்கை.

நன்றி: கலைக்கதிர், ஜூலை 2008


Wednesday, January 26, 2011

கண்டேன் கற்றேன் (004)

ஆடிடும் மயிலைக் கண்டேன்
ஆடிடக் கற்றுக்கொண்டேன்
பாடிடும் குயிலைக் கண்டேன்
பாடிடக் கற்றுக்கொண்டேன்

ஓடிடும் மானைக் கண்டேன்
ஓடிடக் கற்றுக்கொண்டேன்
பேசிடும் கிளியைக் கண்டேன்
பேசிடக் கற்றுக்கொண்டேன்

நீந்திடும் மீனைக் கண்டேன்
நீந்திடக் கற்றுக்கொண்டேன்
தாவிடும் குரங்கைக் கண்டேன்
தாவிடக் கற்றுக்கொண்டேன்

சேமிக்கும் எறும்பைக் கண்டேன்
சேமிக்கக் கற்றுக்கொண்டேன்
சேர்ந்து உண்ணும் காகம் கண்டேன்
சேர்ந்து உண்ணக் கற்றுக்கொண்டேன்

நன்றியுள்ள நாயைக் கண்டேன்
நன்றி உணர்வைக் கற்றுக்கொண்டேன்
உழைத்திடும் எருதைக் கண்டேன்
உழைத்திடக் கற்றுக்கொண்டேன்!

நன்றி: தினமணி-சிறுவர்மணி

அழிவின் விளிம்பில் பவளப்பாறைகள் (005)
பவளப்பாறகள் அழிந்து போவதற்கான காரணங்கள் வெளிச்சத்துக்கு வரத்தொடங்கியுள்ளன. புவிவெப்பமடைவதும் கடல்நீரில் அமிலத்தன்மை கூடுவதும் பவளப்பாறைகளின் அழிவுக்கு முக்கியமான காரணங்கள் என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. பவளப்பாறைகளை அழியாமல் காப்பது எப்படி என்பதும்கூட இந்த ஆய்வுகளில் அடங்கும்.

பவளங்கள் என்பவை மிகச்சிறிய உயிரினங்கள். மரபியல் ரீதியாக ஒத்த உருவமுடையவை. இவை தாவர உயிரிகளை உண்டு வாழக்கூடியவை. பவளங்கள் தங்களைத் தாங்களே காப்பாற்றிக் கொள்ளக்கூடியவை. வளர்சிதைமாற்றத்தின்போது கால்சியம் கார்பனேட் என்னும் வேதிப்பொருளை இவை சுரக்கின்றன. கால்சியம் கார்பனேட் படிவுகளின்மீதுதான் பவளங்கள் அமர்ந்துகொள்கின்றன. இவ்வாறு தோன்றும் படிவுகள் நீண்டகாலம் நிலைத்து பவளப்பாறைகளாக உருவெடுக்கின்றன. இந்த பவளப்பாறைகளில் சுமார் 4,000 வகையான கடல்வாழ் உயிரினங்கள் குடியிருக்கின்றன.

பவளங்கள் தம்முடைய உணவை தாமே தயாரித்துக்கொள்வது இல்லை. பவளங்களுக்குள் வாழும் ஆல்காக்கள் தங்களுடைய பச்சையத்தின் உதவியாலும் சூரிய ஒளியின் உதவியாலும் ஒளிச்சேர்கை செய்து குளுக்கோஸை உற்பத்தி செய்கிறது. இந்த ஆல்காக்களின் குளுக்கோஸ் உற்பத்தி செய்யும் திறன் அபாரமானது. ஆல்காக்கள் உற்பத்திசெய்யும் குளுக்கோஸை உண்டு பவளங்கள் செழிக்கின்றன. மாறாக, பவளங்களில் இருந்து வெளியாகும் நைட்ரஜன் கழிவுகள் ஆல்காக்களுக்கு உணவாக பயன்படுகிறது. கடல் நீரில் நைட்ரஜன் கிடைப்பது அரிது. பவளங்கள் வெளிப்படுத்தும் கழிவுகளில் இருந்து ஆல்காக்களுக்கு தேவையான நைட்ரஜன் கிடைப்பது இயற்கையின் விந்தைகளுள் ஒன்று.,

மனித உடலைப்போன்றே பவளங்களிலும் சிக்கலான மரபியல் கூறுகள் உள்ளன. சுற்றுப்புறத்தில் ஏற்படும் மாற்றங்கள் இந்த மரபியல் கூறுகளை பாதிப்படையச்செய்கின்றன. 250 மில்லியன் ஆண்டுகள் இந்த பவளப்பாறைகள் தங்களுடைய வாழ்க்கைபயணத்தை நிறைவு செய்து விட்டன. ஆனால் இப்போது ஏற்பட்டுவரும் சுற்றுப்புற மாற்றங்களால் இந்த பவளப்பாறைகளில் மாற்றங்கள் ஏற்படத்தொடங்கிவிட்டன. இவற்றுள் பவளப்பாறைகள் வெளுக்கத்தொடங்கியதும் அடக்கம். நெடுங்காலம் ஆபத்தின்றி வாழ்ந்துவிட்ட பவளப்பாறைகளுக்கு மனிதன் எதிரியாகிப்போனது அவமானகரமான செய்தி அல்லவா?

புவி வெப்ப மாறுபாடுகளால் பவளப்பாறைகள் அழிவை எதிர்நோக்கி வருவதாக ஓரிகான் மாகாண பல்கலைக்கழக விலங்கியல் பேராசிரியர் வர்ஜீனியா வீஸ் கூறுகிறார். பவளப்பாறைகள் எதிர்நோக்கியுள்ள சிக்கல்கள் ஏராளம். கடல்நீரின் வெப்பநிலை உயர்வு, கடல்நீர் மாசுபடுதல், வரைமுறையற்ற மீன்பிடித்தம், வண்டல் படிவு, அமிலத்தன்மை அதிகரிப்பு ஆகியவற்றால் பவளப்பாறைகள் அழிந்து வருகின்றன. ஏறத்தாழ 20 சதவீத பவளப்பாறைகள் ஏற்கனவே அழிந்துவிட்டதாகவும், இன்னும் 24 சதவீத பவளப்பாறைகள் அழிவை எதிர்நோக்கியிருப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கடல்நீரின் அமிலத்தன்மை கூடுவதால் அடுத்த நூற்றாண்டில் பவளப்பாறைகள் உருவாவது 50 சதவீதமாக குறையும் என்றும், இருக்கும் பவளப்பாறைகளும் அமிலத்தன்மையால் கரையத்தொடங்கும் என்றும்கூட ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இன்னும் படிக்க:
http://www.sciencedaily.com/releases/2009/05/090528142819.htm

Tuesday, January 25, 2011

ஒட்டகம் (003)
பாலைவன ஒட்டகந்தான்
பள்ளிக்கூடம் போகுது
பாடநூலும் சோறும் நீரும்
பாரமாக சுமக்குது

காலை முதல் மாலை வரை
கழுத்துப்பட்டை நெருக்குது
கால் இரண்டை காலணிகள்
கட்டிப்போட்டு வருத்துது

கூடி ஆடி ஓடும் வயதில்
குனிந்து குனிந்து நடக்குது
குழந்தை முதுகு சின்ன வயதில்
கூன் விழுந்து கிடக்குது

தேடித்தேடி அயல்மொழியில்
திணறிப்பாடம் படிக்குது
தெய்வத் தமிழை வாயில்போட்டு
கடித்துக் கடித்து துப்புது

நேரம் காலம் பார்க்காமல்
நொறுக்குத் தீனி திங்குது
நெஞ்சில் மட்டும் வஞ்சமில்லை
நீட்டிப்படுத்து தூங்குது


சுந்தரம் - சிறுவர் மணி 20.03.2010

அப்பனைப்போலொரு பிள்ளை (004)
“பருத்த உடல் உடைய பெண்கள் கருவுற்றால் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் உப்பிய கன்னங்களுடன் பருமனாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். கருத்தரிப்பதற்கு முன்பாக இருந்த எடை, கருத்தரித்த பின்னர் இருக்கும் எடை ஆகியவைதான் குழந்தையை எதிர்காலத்தில் பாதிக்கப்போகும் நோய்களை தீர்மானிக்கிறது. கருப்பைக்குள் குழந்தை வளரும் சூழ்நிலையின் பாதிப்புகள் இவை” என்கிறார் பேராசிரியர் மார்கரட் மாரிஸ். இவர் நியூ செளத்வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் மருத்துவ அறிவியல் துறையில் பணிபுரிகிறார்.

தாயின் உடலமைப்பு, உணவுப்பழக்கம் இவற்றை ஆராய்ந்த நாம் இதுவரை தகப்பனின் உணவுப்பழக்கம், உடலமைப்பு இவற்றை ஆராயவில்லை. அந்தக்குறையை அந்த பல்கலைக்கழகத்தைச்சேர்ந்த Dr Sheau-Fang Ng என்ற ஒரு பி.எச்டி. மாணவர் போக்கியிருக்கிறார். தகப்பனுடைய உணவு, உடல் எடை இவையெல்லாம் அடுத்த தலைமுறை பெறப்போகும் நோய்களை தீர்மானிப்பதாக உள்ளது என்கிறார் இவர். இந்த ஆய்வில் ஆண் எலிகளுக்கு கொழுப்பும் சர்க்கரையும் நிறைந்த உணவு கொடுக்கப்பட்டு உடல் பருமனாக்கப்பட்டது. இயல்பான எடை கொண்ட பெண் எலிகளுடன் இவை இனப்பெருக்கம் செய்ய வைக்கப்பட்டன. விளைவாகப்பிறந்த பெண் எலிகள் குஞ்சுப்பருவத்திலேயே சர்க்கரை நோய்க்கு ஆளாகி இருப்பது காணப்பட்டது.

இன்சுலின் எனும் என்சைம் நாம் உண்ணும் உணவில் உள்ள குளுகோசை சர்க்கரையாக மாற்றி திசுக்களில் சேமித்து வைக்கிறது. இவ்வாறு திசுக்களில் சேமிக்கப்பட்ட சர்க்கரைதான் நாம் வேலை செய்வதற்கான ஆற்றலைக்கொடுக்கிறது. இன்சுலின் சுரப்பது பாதிக்கப்பட்டால் திசுக்களில் சர்க்கரை சேமிக்கப்படும் நிகழ்வு தடுக்கப்படும். நமது உடலுக்கு வேண்டிய ஆற்றல் திசுக்களில் இருந்து பெற இயலாமல் உடல் கொழுப்பில் இருந்து பெறப்படும். சர்க்கரை நோய் எனப்படும் இந்த நோய் உடல் பருத்த ஆண் எலிகளுக்கும்-இயல்பான பெண் எலிகளுக்கும் பிறந்த பெண் குஞ்சு எலிகளிடம் காணப்பட்டது.

அப்பனிடமிருந்து அடுத்த தலைமுறைக்கு நோய் கடத்தும் திறன் அடர்கொழுப்பு உணவை உண்பதால் விளைந்த விந்துவினால் ஏற்பட்டவை. பெண்எலிக்குஞ்சுகள் சர்க்கரை நோய்க்கு ஆளாவது மட்டுமே இதுவரை ஆய்விற்கு உட்பட்டிருக்கிறது. ஆண்எலிக்குஞ்சுகளின் கதி என்ன என்பது இப்போது ஆய்வில் உள்ளது.

இன்னும் படிக்க:
http://www.sciencedaily.com/releases/2010/10/101021103121.htm

எங்கள் குடும்பம் (002)
வாங்கிப்போட அப்பா
வரவு செலவு அப்பா
ஓங்கி அதட்ட அப்பா
உண்மை அன்பு அப்பா

சமைத்துப்போட அம்மா
வாசல்தெளிக்க அம்மா
படிப்புச்சொல்ல அம்மா
பாசம் காட்ட அம்மா

நாட்டு நடப்பைத் தானே
நாளும் பேசும் தாத்தா
வீட்டுத்தோட்டம் தன்னில்
விதைகள் ஊன்றும் தாத்தா

கையில் சோறு போட்டு
கதைகள் சொல்லும் பாட்டி
தெம்பு தரும் பாட்டி
கம்பு ஊன்றும் பாட்டி

கொண்டை போடும் அக்கா
கோலம் போடும் அக்கா
சண்டை போடும் அக்கா
சட்டை தைக்கும் அக்கா

கொட்டம் அடிக்கும் தம்பி
கூட்டம் கூட்டும் தம்பி
பட்டம் விடும் தம்பி
பம்பரம் ஆடும் தம்பி

ஒன்றாய்க்கூடி உண்ணுவோம்
நூறு கதைகள் பேசுவோம்
நன்றாய் தூங்கச்செல்லுவோம்
நாள்கள் தோறும் மகிழுவோம்.

நன்றி: தினமணி-சிறுவர்மணி

ஃபோலிக் ஆசிட் (003)டாக்டர் கூறியதைக்கேட்ட லூசி அதிர்ச்சியடைந்தாள். 17 வார கர்ப்பிணியாக இருந்த லூசி கர்ப்பத்தைக்கலைக்கவேண்டுமாம்! எந்த ஒரு தாய்க்கும் அதிர்ச்சியான செய்தியல்லவா அது? அவளுடைய வயிற்றில் வளர்ந்துவந்த 17 வாரக்கருவின் முதுகெலும்பு spina bifida என்ற நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறதாம். அதாவது முதுகெலும்புத்தண்டில் பின்னிப்பிணைந்திருக்கும் நரம்புத்தொகுதிகள் முழுமையாக மூடப்பட்டிருக்காதாம்.
லூசி அந்தக்குழந்தையைப் பெற்றெடுத்தால், குழந்தையின் ஆயுள் சக்கரநாற்காலியிலேயே கழியுமாம். குழந்தையின் கற்றல் திறனும் பாதிக்கப்படுமாம். இதைக்கேட்ட லூசியும் அவளது கணவனும் அந்தக்கருவை அழித்துவிட முடிவுசெய்தனர். இதெல்லாம் ஓராண்டிற்கு முன்பு நடந்தது. இப்போதுகூட லூசியைக்கேட்டால் அவர்கள் செய்த முடிவு சரியானது என்றுதான் சொல்லுவாள்.


லூசிக்கு நேர்ந்த துயரம் எந்தவொரு தாய்க்கும் நேரக்கூடாது. கருத்தரிப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்பிருந்து ஃபோலிக் ஆசிட் மாத்திரைகளை சாப்பிட்டிருந்தால் இதுபோன்ற துயரம் ஒருபோதும்
நடைபெறாது. ஐரோப்பிய யூனியனில் ஒவ்வொரு ஆண்டும் 4500 கருக்குழந்தைகள் spina bifida நோயால் பாதிக்கப்படுகிறார்கள். இங்கிலாந்தில் 85 சதவீதம் கருக்கலைப்புகள் இந்த நோய் கண்டறியப்பட்டவுடன் செய்யப்படுகின்றன. Spina bidia குறைபாடுடன் சுமார் 150 குழந்தைகள் பெற்றெடுக்கப்படுகின்றன.

ஃபோலிக் ஆசிட் என்பது நீரில் கரையக்கூடிய பி வைட்டமின் ஆகும். பி9 என்றும் அழைக்கப்படுகிறது. இயற்கையில் இது ஃபோலேட் வடிவில் கிடைக்கிறது. குழந்தைகளைப்போன்றே பெரியவர்களுக்கும் இந்த ஃபோலிக் ஆசிட் தேவைப்படுகிறது. ஃபோலிக் ஆசிட் குறைபாட்டால் இரத்தசோகையும், பிறவிக்குறைபாடுகளும் தோன்றுகின்றன. பழங்கள், இலையுடன் கூடிய காய்கறிகள், கீரைகள் இவற்றிலெல்லாம் ஃபோலிக் ஆசிட், ஃபோலேட்டு வடிவத்தில் நிறைந்துள்ளது.
கருத்தரித்த முதல் மூன்று மாதங்களுக்கு ஃபோலிக் ஆசிட் குறைபாடு இருக்குமானால் கருவின் நரம்புத்தொகுதி பாதிக்கப்படும். மூளை, மண்டை ஓடு இவற்றின் வளர்ச்சி குறையும். நாளொன்றுக்கு 400 மைக்ரோகிராம் ஃபோலிக் ஆசிட் (1/10,00,000 கிராம்=ஒரு மைக்ரோ கிராம்) உண்ணுவதால் 70 சதவீத கருக்குழந்தைகள் இந்தக்குறைபாடுகளில் இருந்து தப்பிப்பிழைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தந்தையாகவேண்டும் என்று திட்டமிடும் ஒவ்வொரு ஆணும் ஃபோலிக் ஆசிட் தன்னுடைய உணவில் சேருமாறு பார்த்துக்கொள்ளவேண்டுமாம். ஆணின் விந்துவில் தோன்றும் குரோமோசோம் குறைபாடுகள் இதனால் தவிர்க்கப்படுகிறது.

இன்னும் படிக்க:
http://www.scienceinschool.org/2009/issue13/folicacid

Monday, January 24, 2011

ஆட்டோ (001)

பள்ளம் மேடு எங்குமே
பாய்ந்து செல்லும் வாகனம்
பள்ளி செல்லும் சிறுவரும்
பாங்காய் செல்லும் வாகனம்

மூலை முடுக்கில் ஓடிடும்
மூன்று சக்கர வாகனம்
காலை மாலை எப்போதும்
காற்றாய்ப் பறக்கும் வாகனம்

அழைக்கும்போது வந்திடும்
ஆட்கள் ஏற்றிச் சென்றிடும்
கேட்கும்போது நின்றிடும்
கேட்ட இடங்கள் சென்றிடும்

கூட்டம் உள்ள இடத்திலும்
குழந்தை போன்று ஊர்ந்திடும்
ஆட்டம் போட்டு ஓடிடும்
ஆட்டோ நமது வாகனம்

நன்றி: தினமணி-சிறுவர் மணி

ஃபிட்னஸ் என்றால் என்ன? (002)
ஃபிட்னஸ் என்றால் என்ன?

ஃபிட்னஸ் என்பதை முழுநலம் என்று பொருள் கொள்ளலாம்.

முழுநலம் உடல் உறுதியினால் மட்டும் வருவதல்ல.

வேலை செய்யும் திறமை, தசைகளின் வலிமை, தசைகளின் திறன், மூட்டுக்களின் இயக்கம், மன அமைதி இவை அனைத்தும் சேர்ந்ததுதான் முழுநலம் எனப்படுகிறது.

அன்றாட வேலைகளைச்செய்யும்போது சோர்வின்றி செய்வதற்கான திறன் இருத்தல்வேண்டும். சுவாச உறுப்புகளும், இதயமும் நன்றாக இயங்கும்போது இந்த திறன் அதிகரிக்கும். மூச்சு வாங்குதல், படபடப்பு, அதிக வியர்வை, மயக்கம் போன்ற அடையாளங்கள் வேலைசெய்யும் முழுநலனுக்கு எதிரானவை.

ஒரு தசை அல்லது பல தசைகள் இணைந்து வலிமையை வெளிப்படுத்தலாம். அசையாத பொருளின்மீது சக்தியை செலுத்துவது ஐசோமெட்ரிக் உறுதி என்றும் அசையும் பொருளின்மீது சக்தியை வெளிப்படுத்துவது ஐசோடோனிக் உறுதி என்றும் வகைப்படுத்தலாம்.

நம் உடலின் எளிதான இயக்கங்களுக்கு மூட்டுகள் அவசியமானவை. மூட்டுக்களைச்சுற்றியுள்ள தசைகளின் உறுதியைப்பொறுத்து மூட்டுக்களின் அசைவுகள் அமைகின்றன. உடற்பயிற்சி மூலம் இந்த தசைகளுக்கு உரமேற்றலாம்.

உறுதியான உடலுக்கு ஈடாக அமைதியான மனம் அவசியம். எண்ணங்கள், உணர்ச்சிகள் இவையெல்லாம் கட்டுப்பாட்டில் இருத்தல் வேண்டும்.

ஒரு தூண்டுதலுக்கு நம்முடைய உடல் எவ்வளவு வேகமாக, எவ்வளவு சக்தியுடன் வினைபுரிகிறது என்பதும் கூட முழுநலனின் ஒரு கூறுதான்.
நம்முடைய உடலின் முழுநலன் சிறுவயதில் குறைவாகவும், வாலிபத்தில் உச்சத்திலும், 60 வயதிற்குமேல் குறைவாகவும் இருக்கும்.

10முதல் 14 வயதுகளில் முழுநலன் வேகமாக இருக்கும்.20 வயதுகளில் உறுதி இருக்கும்.30 முதல் 40 வயதுகளில் வேலைசெய்யும் திறன் உச்சத்தில் இருக்கும்.40 வயதுக்கு மேல் வேகம், உறுதி ஆகியவை குறையும்.

ஆண்களுக்கு வேகமும், உறுதியும் அதிகம்.பெண்களுக்கு தொடர்ந்து வேலை செய்யும் திறன் அதிகம்.ஆண்களின் உடல் உறுதி பெண்களின் உடல் உறுதியைக்காட்டிலும் 30 முதல் 50 சதவீதம் அதிகமாக இருக்கும்.

நோய்களாலும், சரிவிகித உணவு இன்மையாலும், எடை குறைவுபடுவதாலும், எடை அதிகமாக இருப்பதாலும் முழுநலம் பாதிக்கப்படுகிறது.

நிம்மதியான தூக்கம் உடல்திறனை அதிகமாக்குகிறது. தூக்கத்தினால் தசைகளின் திசுக்களில் தேங்கிவிட்ட கழிவுகள் நஞ்சுகள் வெளியேற்றப்படுகின்றன. பழுதுபட்ட திசுக்கள் புதுப்பிக்கப்படுகின்றன.

நன்றி: கலைக்கதிர்

Sunday, January 23, 2011

BPA எனும் நஞ்சு (001)
BPA என்பது bisphenol A எனப்படும் வேதிப்பொருள்ஆகும். இந்த வேதிப்பொருளைக்கொண்டு கடினமான பாலிகார்பனேட் பிளாஸ்டிக் பாட்டில்களும், மழலையர்களுக்கான பீடிங் பாட்டில்களும் தயாரிக்கப்படுகின்றன.

மனித உடலில் மிகுதியாகச் சேரும் BPA இரத்தக்குழாய் சம்பந்தமான நோய்களையும் நீரிழிவு நோயையும் ஏற்படுத்தவல்லது. இந்த பாலிகார்பனேட் பிளாஸ்டிக் பாட்டில்களை தொடர்ச்சியாக ஒரு வாரத்திற்கு பயன்படுத்துவோரின் சிறுநீரில் BPA ன் அளவு 69 சதவீதம் அதிகரிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இது தொடர்பான ஆய்வுகளை Harvard School of Public Health (HSPH) ஐச்சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் செய்துள்ளனர். பாலிகார்பனேட் பாட்டில்களை மாணவர்கள் அதிக அளவில் பயன்படுத்துகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வகையான பாட்டில்களுக்கு மறுசுழற்சி எண் 7 தரப்பட்டுள்ளது. மேலும் இந்த BPA நஞ்சு பல்மருத்துவத்தில் பயன்படும் கூட்டுப்பொருள்களிலும், உணவையும் பானங்களையும் அடைக்கப்பயன்படும் அலுமினியக் குப்பிகளின் உட்பூச்சாகவும் பயன்படுத்தப்படுகிறது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

BPA நஞ்சு உடலில் சேருவதால் பாலுணர்வு மழுங்குதல், பால்சுரப்பிகளில் மாற்றங்கள், விந்து உற்பத்திகுறைதல் ஆகிய குறைபாடுகள் தோன்றுகின்றன என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. குளிர்ந்த பாட்டில்களை பயன்படுத்துவதைவிட சூடான பாட்டில்களை பயன்படுத்தும்போது விளைவுகள் இன்னும் மோசமாக இருக்கின்றன. HSPH ஐச்சேர்ந்த ஜென்னி கார்வில் என்னும் ஆராய்ச்சி மாணவர் ஏப்ரல் 2008ல் 77 மாணவர்களை இதுசம்பந்தமான ஆய்விற்கு உட்படுத்தினார். இந்த மாணவர்களுக்கு ஏழுநாட்களுக்கு எவர்சில்வர் பாத்திரத்தில் குடிப்பதற்கான பானங்கள் வழங்கப்பட்டன. அவர்களின் சிறுநீரில் BPA ன் அளவும் சோதிக்கப்பட்டது. அடுத்த ஒரு வாரத்திற்கு அவர்களுக்கு இரண்டு பாலிகார்பனேட் பாட்டில்களில் பானங்கள் கொடுக்கப்பட்டன. ஆய்விற்கு உட்பட்டவர்களின் சிறுநீரை மீண்டும் சோதித்தபோது BPAன் அளவு 69 சதவீதம் அதிகரித்திருந்தது கண்டறியப்பட்டது.

2008 ஆம் ஆண்டு கனடாவில் குழந்தைகளுக்கான பாலிகார்பனேட் பாட்டில்களில் BPA பயன்படுத்தப்படுவது தடைசெய்யப்பட்டுவிட்டது. சில உற்பத்தியாளர்கள் தாமாகவே முன்வந்து பாலிகார்பனேட் பாட்டில்களில் BPA ன் பயன்பாட்டை முற்றிலும் நீக்கிவிட்டனர். இந்த ஆய்வு இன்னும் தொடரப்படவேண்டும் என்றும் BPA ன் தாக்கத்தால் ஏற்படும் மார்பக புற்றுநோய், இனப்பெருக்கக் குறைபாடு இவற்றை ஆராயவேண்டும் என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.


இன்னும் படிக்க:
http://www.sciencedaily.com/releases/2009/05/090521141208.htm